வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் மீதான தடையை விலக்கியது உயர்நீதிமன்றம்
வவுனியா மாநகர சபை மற்றும் அதன் மேயர் ஆகிய தரப்பினரின் செயற்பாட்டுக்குத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று இரத்துச் செய்தது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபையும் அதன் மேயரும் செயற்படுவதற்குத் தடைவிதிப்பதை விமர்சித்த உயர் நீதிமன்றம், பிரதி மேயர் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
பிரதி மேயர் அந்தப் பதவியை தான் துறக்கின்றார் என அறிவித்தால் அதை மாநகர சபையின் செயலாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும், வழக்கு நிலுவையில் இருக்கின்றது என்ற காரணம் காட்டி அதை ஏற்காமல் விட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்தது.
உயர்நீதிமன்றம் கட்டளை
வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டமை தவறு என்று தெரிவித்து, தேசிய மக்கள் சக்தி தரப்பினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்த அந்த நீதிமன்றம் வவுனியா மாநகர சபை இயங்குவதற்கும், மேயர் எஸ்.காண்டீபன் மற்றும் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் அப்பதவிகளில் செயற்படுவதற்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் வவுனியா மாநகர சபை மற்றும் மேயர் சார்பில் சட்டத்தரணி பெனிஸ்லர்ஸ் துஷானின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதங்களைச் சமர்ப்பித்தார்.
பிரதி மேயரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் முன்னிலையாகி வாதிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்த தரப்பின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ் நேற்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

இந்த மேன்முறையீடு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சோபித்த ராஜகருண, மேனகா விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது.
எல்லா வாதங்களையும் கவனத்தில் எடுத்த உயர்நீதிமன்றம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையை நீண்ட காலம் முடக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு சபை தொடர்ந்து இயங்கவும், மேயர் தமது பதவியில் தொடரவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது. எனினும் பிரதி மேயருக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரவும் உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
ஆயினும் அவர் தாமாகப் பதவியை துறந்தால் அந்தப் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு மாநகர சபையின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam