கீரிமலையில் சட்டவிரோத குப்பைக் கொட்டல்: உடனடி நடவடிக்கை கோரி மனு கையளிப்பு
யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம்(3) சென்ற வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து, மனுவை கையளித்துள்ளனர் வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த மனுவில் கையளித்துள்ளனர்.
வலி வடக்கு பிரதேச சபை
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள் என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில் கொட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
கீரிமலையில் குப்பைகள்
அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால் இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.