வீதிகளில் கால்நடைகளை கட்டினால் சட்ட நடவடிக்கை: வலி. மேற்கு பிரதேச சபை எச்சரிக்கை
வீதிகளில் கால்நடைகளை கட்டி மக்களது போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா பாலரூபன் தெரிவித்துள்ளார்.
விதிகளில் கால்நடைகளை கட்டும் விடயம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதிகளில், குறிப்பாக அராலிப் பகுதி விதிகளில் கால்நடைகளை கட்டி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
துர்ப்பாக்கிய நிலை
இவ்வாறு கால்நடைகளை வீதிகளில் கட்டும் நிலையில் குறித்த கால்நடைகள் வீதிகளில் படுத்திருப்பது மற்றும் வீதிகளுக்கு குறுக்கே செல்வதால் அந்த கால்நடையின் மீது வாகனம் மோதியோ அல்லது அது கட்டப்பட்டுள்ள கயிறு வாகனங்களுக்குள் சிக்கியோ விபத்து சம்பவிக்க கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதுடன், அது மரணம் வரைக்கும் கொண்டு செல்லக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அத்துடன் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள் அல்லது வேறு தேவைகளுக்காக வீதியில் பயணிக்கும் சிறுவர்கள் வீதியில் கட்டப்பட்டுள்ள கால்நடைகள் தங்களை மோதிவிடும் என்ற அச்சத்தினால் கால்நடைகள் கட்டப்பட்டுள்ள வீதியில் பயணிக்க தயங்குகின்றனர்.
சட்ட நடவடிக்கை
முன்னர் நடைபெற்ற சபை அமர்வில், கால்நடைகளை வீதியில் கட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிரேரணையாக கொண்டுவரப்பட்டு அது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
எனவே இன்று முதல் இவ்வாறு வீதிகளில் கால்நடைகளை கட்டுபவர்களது கால்நடைகள் பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டு, குறித்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னரே கால்நடைகள் திருப்பி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.