வெளிநாட்டில் இருந்து தாய் அனுப்பிய அதிநவீன தொலைபேசியால் மகளுக்கு நேர்ந்த கதி
புத்தளம், உடப்புவ பகுதியில் 15 வயது சிறுமியுடன் தொடர்பு வைத்து பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் முந்தலம், பள்ளிவாசல்பாடுவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
சிறுமி அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரது தாயார் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசி
தந்தையுடன் வீட்டில் வசித்து வரும் சிறுமிக்கு, சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து அவரது தாயார் நவீன அம்சங்கள் கொண்ட கையடக்க தொலைபேசி ஒன்றை அனுப்பியுள்ளார்.

தொலைபேசியை பயன்படுத்தி சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுமி தனக்கு 17 வயது என்று சந்தேக நபரிடம் கூறியிருந்தார். அதற்கமைய, இருவருக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டுள்ளது.
திருமண உறவு
இந்நிலையில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் காதலனை சந்திக்க சென்ற சிறுமியை, சந்தேக நபர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று முதல் தனது காதலனுடன் திருமண உறவில் இருப்பதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். .
இந்நிலையில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு முந்தலம் பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை சிலாபம் பொது மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.