அரசாங்க வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் - வெளியான தகவல்
நாடு முழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர், சிற்றூழியர்கள் உள்ளிட்ட சுமார் முப்பதாயிரத்துக்கும் அதிகமான ஊழியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கை ஒருங்கிணைந்த தாதியர் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தாதியர் சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
செவிலியர் மற்றும் சிற்றூழியர் வெற்றிடங்கள்
இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், செவிலியர் பணியாளர்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர்.

செவிலியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.
அத்துடன், தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 14,000 சிற்றூழியர் வெற்றிடங்கள் உள்ளன.
பணிச்சுமை
இத்தகைய சூழ்நிலையில், ஒரு தாதி உத்தியோகத்தர் இரண்டு தாதிகளின் பணியை செய்ய வேண்டியுள்ளது. சில சமயங்களில், தாதிகள் பல நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டியிருப்பதால், தாங்க முடியாத பணிச்சுமை ஏற்படுகிறது.

மேலும், கிண்ணியா வைத்தியசாலையில் சமீபத்தில் நடந்த சம்பவம் உட்பட பல பிரச்சினைகளுக்கு இந்த நிலைமையே மூல காரணமாக உள்ளது.
தாயர் பற்றாக்குறையை சமாளிக்க, குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட காலத் திட்டம் உடனடியாக வகுக்கப்படாவிட்டால், வைத்தியசாலை அமைப்பு மேலும் சீர்குலைந்துவிடும் என எச்சரித்துள்ளார்.