அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயமில்லை: ஈரான் மத்திய வங்கி ஆளுநர் திட்டவட்டம்
அமெரிக்காவிடமிருந்து விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டிய எந்தவொரு "கட்டாயமும்" ஈரானுக்கு இல்லை என்று அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட ஈரானிய நிதியைக் கொண்டு அமெரிக்க விளைபொருட்கள் வாங்கப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 6 பில்லியன் டொலர் நிதியைக் கொண்டு "அடிப்படைப் பொருட்கள் மற்றும் மருந்துகளை" மட்டுமே வாங்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களின் விலை
இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கப் பொருட்களின் விலையும் தரமும் சாதகமாக இருக்கும் பட்சத்தில், அங்கிருந்து பொருட்களை வாங்குவதற்கு தங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீதமுள்ள 6 பில்லியன் டொலர் நிதி முற்றிலும் அடிப்படைப் பொருட்களுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், பொருளாதாரத் தடைகளுக்கு உட்படாத பிற இதர பொருட்களையும் ஈரானால் கொள்முதல் செய்ய முடியும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் ஹெம்மாதி மேலும் விளக்கமளித்துள்ளார்.