இலங்கையில் மோசமாகியுள்ள மனித உரிமை மீறல்கள்! அமெரிக்கா கவலை
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது 2024 ஆம் ஆண்டு மனித உரிமை நடைமுறைகள் குறித்த நாட்டு அறிக்கைகளில் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இலங்கையின் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி அதிகாரத்துக்கு இந்த ஆண்டில் (2024 இல்) வந்ததார் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அரசின் பழிவாங்கல்
ஆனால், துஷ்பிரயோகங்களுக்கு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசு 'குறைந்தபட்ச நடவடிக்கைகளையே' எடுத்ததாக அந்த அறிக்கை குறை கூறியுள்ளது.
ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் (முன்னைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில்) மனித உரிமைகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஏழு காவல் மரணங்கள், ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவங்கள் மற்றும் விமர்சகர்களை தடுத்து வைக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை முக்கிய அவதாணிப்புகளில் அடங்கும் என அறிக்கை விவரித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல், சர்வதேச சமவாயச் சட்டத்தின் கீழ் கைது செய்தல் மற்றும் அரசின் பழிவாங்கல் அல்லது விளம்பர வருவாயை இழக்கச் செய்தல் குறித்த அச்சத்தால் இயக்கப்படும் சுய தணிக்கை உள்ளிட்ட ஊடகக் கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா எடுத்துக்காட்டியுள்ளது.
நீதித்துறை நடவடிக்கை
தொழிலாளர் உரிமைகள் நடைமுறையாக்கம் மோசமாக இருப்பது, ஓரங்கட்டப்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது மற்றும் மனிதப் புதைகுழி விசாரணைகள் உட்பட போர்க்கால காணாமல் போன வழக்குகளில் மெதுவான முன்னேற்றம் ஆகியவை அடங்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தையும் அறிக்கை விமர்சித்ததுள்ளது. எதிர்ப்புக்களை அடக்க இது பயன்படுத்தலாம் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
தண்டனையிலிருந்து விலக்களித்தல் 'ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக' நீடிக்கின்றது, துஷ்பிரயோகங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கை குறைவாகவே இருந்தது என்று அறிக்கை உறுதி செய்துள்ளது.



