அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் சாதனை: 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் ரஷ்ய வீரரான மேத்வதேவை வீழ்த்தி செர்பியா வீரரான நோவக் ஜோகோவிச் சம்பினாகியுள்ளாா்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
தனது 36 ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜோகோவிக், 24 வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இது அவர் வெல்லும் 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Novak Djokovic handled the weight of history to defeat Daniil Medvedev on Sunday.
— US Open Tennis (@usopen) September 11, 2023
கூடைப்பந்தாட்ட வீரருக்கு அஞ்சலி
பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020 இல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) ஜோகோவிச் அஞ்சலி செலுத்தினார்.
அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார்.
வெற்றிக்கு பின்னர் கருத்துத் தெரிவித்த ஜோகோவிச், ''நான் விளையாடுவதற்காக என் பெற்றோர் நிறைய தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்'' என தெரிவித்தார்.
சாதனை வீரர்
நான்காவது முறையாக ஒரு ஆண்டில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மூன்று பட்டங்களை வென்றுள்ளார் ஜோகோவிக்.
2011, 2015, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஒரே ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குறித்த சாதனையை செய்துள்ளார். இது வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை ஆகும்.
இந்த ஆண்டு இதற்கு முன்னதாக அவர் பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீங்கள் இங்கு இன்னும் என்ன செய்து கொண்டு உள்ளீர்கள் ஜோகோவிச். நான் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளேன். நீங்கள் 24 பட்டங்களை வென்று உள்ளீர்கள். நாம் இருவருக்கு இடையிலும் நீடிக்கும் போட்டி ஆரோக்கியமானது என மேத்வதேவ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |