அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்தில் கூடும் முக்கிய தலைவர்கள்
வொஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கென்ஸ்டாக் மலைப்பகுதி ரிசார்ட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நாளை(19.06.2026) இடம்பெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை சுவிஸ் அரசாங்கம் இன்று(18.06.2026) வெளியிட்டுள்ளது.
உயர் மட்டக்கலந்துரையாடல்
சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளுடன், மத்தியஸ்தர்களாகச் செயல்படும் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் நாளை கலந்துகொள்ளவுள்ளன.

முன்னதாக இந்த கூட்டத்தில் "தொடர்புடைய பிற நாடுகளும்" பங்கேற்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய புதிய அறிக்கையில் அந்த வரிகள் நீக்கப்பட்டு, இந்த நான்கு முக்கியத் தரப்புகள் மட்டுமே கலந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் கால அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த பிற தகவல்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்தக்கட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.