"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்கு காட்டி வருகின்றனர்" - வேலுகுமார்
"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்கு காட்டி வருகின்றனர்" என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்சக்களின் அரசு இன்று மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பங்காளிகள் ஒவ்வொருவராக வெளியிலே குதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகளைப் பார்ப்பதை விட தமது அரசாங்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தட்டுத் தடுமாறுவதே அதிகமாக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்கு காட்டி வருகின்றனர்.
அதற்கு அபிவிருத்திக்காக இருக்கின்றோம் என நியாயமும் கூறுகின்றனர். இன்று அரசாங்கத்திலிருந்து கொண்டு அரசாங்கத்தை எதிர்ப்பதைப் போல ஊடகங்களுக்குக் கருத்து கூறுவது, பாணியாக மாறியுள்ளது.
அதிலே மலையக மக்களின் பிரதிநிதிகள், முதன்மையானவர்களாக உள்ளனர். எமது மக்கள் இன்று ஒரு வேலை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வருமான குறைவு, விலைவாசிகள் அதிகரிப்பு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலைமைகள் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடருமாயின் மீளத்திருத்த முடியாத ஒரு நிலைமைக்கு எமது சமூகம் சென்றுவிடும்.
இவற்றை கவனத்தில் எடுத்து, ஜனாதிபதியின், பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டியவர்கள், அரசாங்கத்தின் உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றும் பேசுபவர்களாக உள்ளனர். மக்களுக்காகக் குரல் கொடுக்க இதனை விட வேறு சந்தர்ப்பம் கிடையாது.
ஆனால், ஆளும் தரப்பு மௌனமாக உள்ளது. வாய் திறந்து மக்களுக்காகப் பேசுவதைக் காணமுடியவில்லை. மாறாக தமது சலுகைகள் மீதே குறிவைத்துச் செயற்படுகின்றனர்.
இது சலுகைகளைப் பெறுவதற்கு மக்களைக் காட்டிக்கொடுக்கும் நேரமல்ல. அரசியல் லாபம் பெறுவதற்கு நாடகம் ஆடும் நேரமுமல்ல. மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்திற்குள் வாத விவாதத்தில் ஈடுபட வேண்டிய நேரம்.
பேரம் பேசலில் ஈடுபடவேண்டிய நேரம். ஆனால் இவை எதனையும் காணமுடியவில்லை. ஒருபக்கம் சலுகைகளுக்காக அரசாங்கம் நல்லது என்கின்றார்கள். மறுபக்கம் மக்களை ஏமாற்ற நாம் தவறானதை எதிர்க்கின்றோம் என்கின்றார்கள்.
இன்று இந்த நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மீண்டும்
கட்சி தாவி நாம் நல்லவர்கள் என நாடகமாட முடியாது. நாடே சேர்ந்து ராஜபக்ச
அரசாங்கத்தை விரட்டி அடிக்கும் போது, மலையக மக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆளும்
தரப்பில் உள்ளவர்களை விரட்டி அடிப்பது நிச்சயமாகி விட்டது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri