பால் வீதியில் சுற்றி வரும் அசாதாரண பொருள்:இடைவிடாது வெளியிடும் ரேடியோ அலைகள்!
பால் வீதியில் தொலைவில் சுற்றிவரும் அசாதாரண பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலிய வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமி உட்பட சூரிய குடும்பத்தின் விண்மீன்கள் இருக்கும் அண்டவெளி, பால் வீதி என அழைக்கப்படுகிறது.
விண்வெளியில் இருந்து வரும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவருக்கு இந்த அசாதாரண பொருள் குறித்த துப்பு கிடைத்துள்ளது.
இந்த மாணவர் தனது பட்டப்படிப்புக்கான ஆய்வு கட்டுரையை தயாரிக்கும் போது பால் வெளியை சுற்றும் இந்த அசாதாரண பொருளை கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து அவுஸ்திரேலிய வானியல் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த அசாதாண பொருள் என்ன என்பதை கண்டறிய ஆர்வம் கொண்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த அசாதாரண பொருள் வெளியிடும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்து அவற்றை வைத்தே மாணவன் அதனை கண்டுபிடித்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் பாலைவன பிரதேசத்தில் அமைந்துள்ள மச்சிசன் வைடர்ஃபீல்ட் தொலைநோக்கியின் உதவியுடன் ரேடியோ அலைகளை மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
ரேடியோ அலைகள் நிற்காமல் ஒரே நேரத்தில் தொடர்ந்தும் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாக இருளான நட்சத்திரங்களே ரேடியோ அலைகளை வெளியிடும்.
எனினும் தொடர்ந்தும் ஒரே நேரத்தில் இப்படியான ரேடியோ அலைகள் வெளியிடப்பட்டதாக பதிவுகள் இல்லை என வானியல் ஆராய்ச்சியாளர் நடாஷா ஹர்லி வோக்கர்(Natasha Hurley-Walker)தெரிவித்துள்ளார்.
பால் வெளியில் தொலைவில் சுற்றி வரும் இந்த அசாதாரண பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் நடாஷா ஹர்லி வோக்கர் இடம்பெற்றுள்ளார்.