திருகோணமலையில் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி திருகோணமலை (Trincomalee) வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கன்னியா உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து நேற்று (03.04.2024) நடைப்பவனியாக அனுராதபுர சந்தி வரைக்கும் வருகை தந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவர்களினால் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனமானது (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE ), நாடளாவிய ரீதியில் 12 மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுள்ளது.
பாரிய பின்னடைவு
இவற்றுள் ஏனைய கற்கைநெறிகளைக் காட்டிலும் குறிப்பாக உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுவதுடன் வருடாந்தம் நூறுக்கு அண்மித்த மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகிறார்கள்.
பாடசாலையை பூர்த்தி செய்த பின்பு உயர்
கல்வியை தொடர எதிர்பார்த்திருப்போருக்கான பல்கலைக்கழகங்களுக்கு நிகரான சிறந்த
தெரிவாக இந்த நிறுவனம் காணப்படுகின்றது.
இந்த கற்கைநெறியானது நிரந்தர விரிவுரையாளர்கள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்படவுள்ளமையானது திருகோணமலை சமூகத்தின் கல்விப்புலத்திலே பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.
பாரிய பொறுப்பு
இங்கு கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் பலர் தற்போது IT துறையில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறிருக்க, திருகோணமலைவாழ் இளம் சமூகத்தினை துறைசார்ந்து வளப்படுத்தும் பயனுறுதிமிகு இக்கற்கைநெறியானது இடைநிறுத்தப்படுவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதும் தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க வேண்டியதும் திருகோணமலை மீது உண்மையிலே கரிசனை கொண்ட குடிமகன் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |