விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி (Photos)
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் கணவர் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்தவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த அக்பர் அலி பாத்திமா அஸ்பா (வயது 22) என தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்
சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குறித்த மாணவி தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட இரத்தப்போக்கினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சடலம் குறித்த மாணவியின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.