டித்வா சூறாவளியால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு - பிரதமர் உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை
'டித்வா' சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பானது நேற்று (14.05.2026) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கை
இந்த சந்திப்பின் போது, "டித்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி - ஏப்ரல் 2026)" என்ற உத்தியோகபூர்வ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய செயற்பாடுகளைத் தேசிய மட்டத்தில் விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான ஆரம்பக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை இருதரப்பும் இணைந்து மீளாய்வு செய்ததுடன், அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு ஆதரவுகளை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் இடைவிடாத தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்தல், அனர்த்தத்தால் உளவியல் ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் முக்கிய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

இந்த உயர்மட்டச் சந்திப்பில், யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி எம்மா பிரிகாம், யுனிசெப் பிரதிநிதி பெகோனா அரேலானோ உள்ளிட்ட யுனிசெப் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri