இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக தீவிரத்துடன் பெய்யும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிககை விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக, ஏரிகள், நீர்நிலைகளுக்கு அருகில் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களும், வீதிகளைப் பயன்படுத்துபவர்களும் தங்கள் பகுதிகளில் பெய்யும் மழை குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பிரிவின் இயக்குநர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அடைமழை பெய்யக்கூடும்
அடுத்த சில நாட்களிலும் கணிசமான அளவு அடைமழை பெய்யக்கூடும். இதனால், நீர்ப்பாசனத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அது தொடர்பான ஏனைய நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து தீவிர கவனத்துடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்நிலைகளின் நிலைமை மற்றும் மழைவீழ்ச்சியைக் கருத்திற் கொண்டால், குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியில் அதிகபட்சமாக அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம் சுமார் 130 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் மேலும் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு
நில்வளா கங்கையின் கீழ் பகுதியில் தற்போது நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தபோதிலும், இன்னும் சிறிய அளவிலான வெள்ள நிலைமையே காணப்படுகிறது.

மிகக் குறுகிய காலப்பகுதியில் தீவிரமான மழைபெய்வது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.
நேற்று அம்பாறையில் இரண்டு மணித்தியாலங்கள் போன்ற குறுகிய காலத்தில் சுமார் 130 மில்லிமீற்றர் மழை பதிவானது போன்ற மழை பெய்தால் இந்த நிலைமை ஏற்படலாம்.
குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகிலும் தாழ்நிலப் பகுதிகளுக்கு அருகிலும் வாழும் மக்களும், வீதிகளைப் பயன்படுத்துபவர்களும் தங்கள் பிரதேசங்களில் பெய்யும் மழை குறித்து எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.