வடைக்குள் கரப்பான்பூச்சி! சுண்டலுக்குள் அட்டை: அடுத்தடுத்து வெளிவரும் உணவகங்களின் மோசமான செயற்பாடு(Photos)
நாட்டின் சில உணவகங்களில் விற்கப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றதாக சுத்தமற்றதாக காணப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கமைய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கரப்பான் பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் செத்து கிடக்கும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இதேவேளை மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த உணவு பொருட்களை பயன்படுத்திய சில உணவகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுண்டலுக்குள் அட்டை
இந்நிலையில் இன்றைய தினமும்(17.06.2023) அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடையில் நபரொருவரிற்கு கொடுத்த உணவில் அட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த உணவக்கத்திற்கு சென்று சோறு சாப்பிட்ட ஒருவரின் உணவில் இருந்த கீரை சுண்டலில் அட்டை காணப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அவர் குறித்த விடயத்தை எமது ஊடகத்திற்கு அறிய தந்தார்.
இதுபோன்று யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டுள்ளது.
வடைக்குள் கரப்பான்பூச்சி
யாழ்.சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உழுந்து வடை ஒன்றினை வாங்கியுள்ளார்.
பின்னர், வீடு சென்று வடையை சாப்பிட்ட போது, வடைக்குள் கரப்பான்பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டு, உடனடியாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு உடனடியாக சென்ற சுகாதார பரிசோதகர் கடையில் மேலதிக சோதனைகளை நடத்தியதுடன், வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
பூந்திக்குள் புழு
இதேபோன்று யாழ்.ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறு உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில்,“யாழ்.ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள். இதை தான் பலரும் ரசித்து ருசித்து உண்கிறார்கள். இப்படியான சுவையான புழு உணவு யாருக்கு வேண்டும்.”என பதிவிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட உணவில் பீடி துண்டொன்று காணப்பட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் பெயர் விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
இவ்வாறு பல இடங்களில் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் சுகாதாரமற்ற தன்மை காணப்படுகின்றது.
இருப்பினும் மேற்கூறப்பட்டவாறு சில உணவகங்கள் சார்ந்த செய்திகளே வெளிவந்துள்ளன. இன்னும் சில இடங்களில் அதை பொருட்படுத்தாத நிலையும் காணப்படுகின்றது.
உணவகங்களின் மோசமான செயற்பாடு
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொது சுகாதார துறைக்கு தெரியப்படுத்தப்பட்டாலும் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தளவிற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
காரணம் உணவில் கரப்பான்பூச்சி, புழு தற்போது சுண்டலில் அட்டை இருக்கும் சம்பவங்கள் வெளியானாலும் அவை அனைத்தும் பொது சுகாதார பிரிவினரிடம் கொண்டு செல்லபடுகின்றதா? அவ்வாறு கொண்டு செல்லப்படும் விடயங்கள் தொடர்பில் முழுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கபடுகின்றதா என்பது தொடர்பான விடயங்கள் வெளிவருவது குறைவாகவே உள்ளது.
மேலும் மக்களுக்கான பெரும்பாலான சேவைகளில் பல ஊழல்களும் தனிநபர் சுய இலாப செயற்பாடுகளும் தலைதூக்கி அவர்களுக்கு குறித்த சேவை சரியாகவும் முழுமையாகவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் ஒருவேளை உணவிற்காக உழைக்கும் மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சுத்தமான உணவை கூட வழங்க முடியாத நிலையில் இயங்கும் உணவகங்களின் மோசமான செயற்பாடுகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |