விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..!
" உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு". உன்னை நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினுங்கூட நீ சத்தமிட வேண்டும்.
ஒரு பச்சைக் குழந்தைகூட தன்னருகே யாரும் துணைக்கில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும்.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள் கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாய் போராடாதிருக்கும் நிலையில் உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது ; வெளிநாடுகளும் பாராது.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள்
உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின் நீ கை தூக்க வேண்டும். ஆதலால் களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே உள்ளும், புறமும் கவனத்தை ஈர்த்துப் போர் கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும்.
"Only the fittest will survive ' அதாவது "தக்கன மட்டுமே உயிர் வாழும்" அதாவது இங்கு காணப்படும் சூழல் என்பது ஒன்று. அந்தச் சூழலையும், தன்னையும் இணைத்துத் தனக்குப் பொருத்தமாகக் கையாள தெரிந்தவைத்தான் உயிர் வாழும் என்பதே இதன் முழுமுதற் பொருள்.
இந்த உயிரியல் டார்வினிசத்தைச் சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக் கையாளும்போது அதை அதிகம் தலைமைத்துவப் பண்புடன் கூடிய வகையிற் கையாள வேண்டும்.
அதாவது உயிரியல் டார்வினிசத்தில் அந்த உயிருக்குச் சுயநல உயிரியல் மரபணு ( selfish gene ) இயல்பாக இயற்கைத் தேர்வின் படி தத்துவத்தை வழங்குகிறது.
மனிதனும் உயிர் என்ற வகையிற் சுயநல மரபணுவைக் கொண்டவனேயானாலும் ஒரு சமூகமாகும் போது அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமை தேவைப்படுகிறது.
இந்த வகையில் உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல் டார்வினிசம் குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால் அந்தச் சமூகம் தக்க தேர்வுவின்றித் தேய்ந்து போய் அல்லது அழிந்து போய்விடும்.
அதாவது உயிரிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட உயிர்களின் தலைமைத்துவத்திற்கு அப்பால் மனிதச் சமூகத்தில் நுண்ணறிவும், முன்னறிவும் கொண்ட அளவாற் பெரிய ஓரினம் ( சிங்கள இனம்) அளவாற் சிறிய இனங்களின் மீது அதிக தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும், சீரழிவுக்கு உள்ளாகும்.
இந்த வகையில் ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும், முனைப்புடனும் செயல்பட்டால் மட்டுமே காணப்படும் சமூக சூழல் யதார்த்தத்தில் தம்மைத் தக்க வைக்க முடியும்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஒன்றரை தசாப்தங்கள்
மனிதனும் ஏனைய பிராணிகள் போல ஓர் உயிர் என்பதால் உயிரியல் டார்வினிசத்திலுள்ள பொதுத்தன்மைகள் மனிதனுக்கும் உண்டேயானாலும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது.
அரசுள்ள அளவாற் பெரிய சிங்கள சமூகத்தோடு அரசற்ற அளவாற் சிறிய தமிழ்ச் சமூகம் தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால் அந்தச் சமூகம் தன் வாழ்நிலையை இழந்துபோக நேரும்.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தம்மை தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு, வெளிநாடுகள், சர்வதேச சமூகம் , உலகளாவிய அரசியல் நிலை போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலைக்கும் பொருத்தமாக தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான அரசியற் சூழலில் ஈழத்தமிழர் நிலையானது கூழ்முட்டை ( Rotten agg) நிலையையே கொண்டுள்ளது.
மேற்படி நடப்புநிலை உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய யதார்த்தத்தை உள்வாங்கி இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டுமென்று இக்கட்டுரை வேண்டி நிற்கின்றது.
ஏறக்குறைய 1970களின் பிற்பகுதியளவில் ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் தரைப்படை, கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை, சர்வதேச சரக்கு கப்பல் அணியென வளர்ந்த நிலையில் கோட்டை கொத்தளங்களெல்லாம் அழிந்தவாறு குண்டூசிகூட இல்லாத நிலையை ஆயுதப் போராட்டம் அடைந்துள்ளது.
ஆனால் 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை ராணுவம் இன்று அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய வகையில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப்படுகிறது.
நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும் , இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினரையும் பாதிக்கு மேல்ச் சுருங்கி கிடக்கிறது.
மேலும் சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்ப்பட்டுக் கிடக்கிறது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல் உலகெங்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும் அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது.
எனவே மக்கள் போராட்ட அலையெனும் ஓராயுதம் உலகரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கி ஆயுதத்துக்குப் பதிலாக மக்கள் திரளெனும் ஓராயுதம் மக்கள் சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது.
முள்ளிவாய்க்காலில் பறிபோன துப்பாக்கி -- வெடிகுண்டு
முள்ளிவாய்க்காலில் இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததோடு முடிந்து போகவில்லை. அங்கு அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில் இனப்படுகொலையென்னும் மிகக் கூரியதோர் ஆயுதத்தை உற்பத்தி செய்தது.
எனவே முள்ளிவாய்க்காலில் பறிபோன துப்பாக்கி -- வெடிகுண்டு ஆயுதங்களுக்குப் பதிலாக மக்கள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதன் வாயிலாக இனப்படுகொலையென்னும் ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்தது.
இந்த வகையில் இனப்படுகொலை என்ற ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட " டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு" என்ற நூலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது.
அந்நூல் வெளியிட்டு விழாவில் தமிழரசு , தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியற் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும், ஊடகவியலாளர்களும், உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைக்கான போராட்டங்களைக் கூட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
முதலாவதாக இலங்கையில் நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபு அரசியற் பாதை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை வளர்க்கவே உதவியுள்ளது என்பதை 1833 அண்டு நடைமுறைக்குவந்த கோல்புறூக் யாப்பு நடைமுறையிலிருந்து இன்றைய (2025) ஆட்சியாளர்களின் யாப்பு நடைமுறை வரை வெள்ளிடை மலையெனத் தெரிகிறது.
தமிழ்த் தலைவர்கள் குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பை ஒட்டிய காலத்தில் 14 மணி நேரம் மூச்சு விடாமற் பேசியும் பயனில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் திரைப்படப் பாணியில் 14 நிமிடங்கள் அங்கிங்குமாய் காலை, கையை உயர்த்தி, முதுகை வளைத்து, கண்ணை உருட்டி சொண்டைப் பிதுக்கிப் பேசியும் எந்த பயனுமில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும், புறமும் நிரூபிப்பது சரி. நாடாளுமன்றத்தில் பேச்சுப்போட்டி நடத்தி எதனையும் சாதிக்க முடியாது.
மாறாக நாடாளுமன்றத்தை உள்ளும், புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து அதற்கூடாக போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், புறமும், உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இதற்கான வியூகங்களைப் பின்பொரு தனிக் கட்டுரையில் ஆராய்வோம். இப்போது போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளும், புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா தவிர மேலும் 31 நாடுகளில் அந்த தடை பட்டியல் நீள்கிறது.
ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே உள்ளும், புறமும் இடமில்லை. ஆனால் இனப் படுகொலைக்கெதிரான குரலை மனிதநேயத்தினடிப்படையில் உலகெங்கும் முன்னெடுக்க முடியும்.
அதனைத் தமிழகத்திலும் முன்னெடுக்கலாம், முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம், அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம், ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக்கலாம், உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கலாம்.
அது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை எதிர்க்கவல்ல வேறு சக்திகளுக்கும் எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதம்.
தமிழ் மக்கள் மீதான அனைத்து மனிதப் படுகொலைகளும்
செம்மணிப் புதைகுழியும் இதற்கு அரணமைக்கிறது. குறிப்பாக 1958 ஆம் ஆண்டிலிருந்து கறுப்பு யூலை வரையும் அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி நிர்வாக நடவடிக்கைகளும் இவற்றுக்கு அணிசேர்க்கின்றன.
முதலாவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை, படுகொலை, சிறுவன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை என்பனவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு பொதுச் ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம். சிவில் சமூக உறுப்பினர்கள், ,அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், மூத்த குடிமக்கள் உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயல் குழுவை உருவாக்கி பிரச்சினை கையாளுவதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதுவே தமிழ் மக்களால் உள்ளும், புறமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதுவே எம் மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரி செய்வும் புதிய செயல்ப் பூர்வமான ஒரு பாதையை வடிவமைக்கவும் வழி கோலும்.
" An idle mind is the devil's workshop" "வெறும் மனம் பிசாசின் பட்டறை" என்பதற்கிணங்க போராடாது தேங்கி வரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு அதனை தங்கள் பட்டறையாக மாற்றிவிடும்.
இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித்தானுள்ளது. எனவே இனப்படுகொலை என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி அதற்காகப் போராடவல்ல ஒரு அமைப்பைச் சனநாயக பூர்வமாக வடிவமைத்து வெற்றிடங்களில் நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில் கொண்டையும் கட்டி, கொண்டையிற் பூவும் கட்டி , அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டி செல்லும்.
உலகெங்கும் சிதறி வாழும் ஈழத் தமிழர்களே! ஈழத்தமிழ் மண் இந்து மாகடலின் மையத்தில் இந்தியாவின் வாசற்படியாக இருக்கவல்ல அதன் கேந்திர அமைவிடத்தின் நிமித்தம் அது உலகப் பெரும் வல்லரசுகளையெல்லாம் ஈர்க்கவல்ல புள்ளியிலுள்ளது.
சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால் அதனை ஒரு முதலீடாக் கொண்டு அறிவாற்றலுடனும், ஆளுமைத் திறனுடனும் தமிழ் தலைவர்கள் செயல்பட வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 19 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
