வடக்கின் உப்பு உற்பத்தியும் விருத்தி செய்யப்படாத பொக்கிஷமான ஆனையிறவு உப்பளமும்!
இலங்கைத் தீவின் வட பகுதியிலும் இயற்கை வளங்கள் நிறைவாகவே உள்ளன. அத்தகைய வளங்களைக் கொண்டு கைத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பன இத்தகைய இயற்கை வளங்களை மையமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
இதில் யாழ் மாவட்டத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தையும் இணைக்கும் ஆனையிறவு பகுதியில் உள்ள உப்பளம் இன்னும் விருந்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இதை விட வடக்கில் மேலும் பல பகுதிகளில் உப்பளம் அமைக்கக் கூடிய வசதிகள் இருந்தும் அவை அமைப்பதற்கான அனுமதிகள், இழுபறிகள் காரணமாக அவை கைவிப்பட்டும் உள்ளன.
உள்நாட்டில் உப்பு உற்பத்தியை விருந்தி செய்யாமையாலும், தூர நோக்கற்ற கடந்த கால அரச கொள்கைகளாலும் உப்பினை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ஒரு நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனையிறவு உப்பளமும்
இலங்கையில் உப்பு உற்பத்தியில் முதன்மையான வடக்கின் பொக்கிசமே ஆனையிறவு.
ஆனையிறவு என்பது எவராலும் இலகுவில் மறந்து விட முடியாத ஒரு இடம். ஈழப் போராட்ட வரலாற்றில் பாரிய யுத்தம் நடந்த ஒரு இடமாகவும், யாழ்ப்பணத்திற்கான நுழைவாயிலாகவும் இருப்பதுவே அதற்கு காரணம்.
இதற்கும் மேலாக ஆனையிறவு உப்பளமும் உலகப் புகழ் பெற்றது. இடஅமைவு காரணமாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் முக்கிய இராணுவ நிலையமாக தொழிற்பட்ட ஆனையிறவு 1938 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியர் காலத்தில் உப்பளமாக பரிணாமம் பெற்றது.
களப்பு கடற்கரையும், வேகமான காற்றும், மணல் தரையும், அதிக வெப்பமும் உப்பு உற்பத்திக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கையின் சில பகுதிகளில் உப்பு பெறப்பட்ட போதும் பிரதான உப்பளமாக ஆனையிறவே விளங்கியது.
1946 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த உப்பளம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று பெரிய உப்பளம். இது ஆனையிறவில் உள்ள பழைய உப்பளம் ஆகும்.
ஆனால் இதனுடைய பரப்பளவு 777 ஏக்கர் மட்டுமே. இந்த உப்பளத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இதனுடன் இணைந்த குறிஞ்சாத்தீவு உப்பளத்தைச் சின்ன உப்பளம் என்றே சொல்வதுண்டு.
இதனுடைய நிலப்பரப்பு 1169 ஏக்கர். பெரிய உப்பளத்தை விட சின்ன உப்பளத்தின் நிலப்பரப்பு பெரியது என்றாலும் உப்பளத்தின் நிர்வாகப் பிரிவு பழைய உப்பளத்திலேயே இருந்தது.
இதற்கு காரணம் யார்...?.
அங்கே தான் வடபிராந்திய உப்பளத் தலைமையகம் இயங்கி வந்தது. 1990 வரை இலங்கையின் முன்னனி உப்பளமாக திகழ்ந்ததுடன் வருடாந்த உப்பு உற்பத்தியாக 60,000 – 80,000 க்கும் இடைப்பட்ட மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.
இதில் நாட்டின் தேவைக்கு பெற்றுக் கொண்டு, ஏனைய உப்பு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியானது.
இந்நிலையில் நாட்டில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் பெற்றத்தை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு ஆனையிறவு உப்பளத்தின் தொழிற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இதன் பின்னர் போரின் முக்கிய வலயமாக மாறிய ஆனையிறவு, யுத்தம் முடிவடைந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் உப்பளமாக மீள இயங்கத் தொடங்கியுள்ள போதும், முன்னர் அரசாங்கத்தின் உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் செயற்பட்டிருந்த இவ் உப்பளம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மன்னார் உப்பு உற்பத்தி கூட்டுத் தாபனம் என்னும் தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இருப்பினும் இன்னும் முழுமை பெறாத நிலையிலேயே இயங்கி வருகின்றது. இதனுடன் இணைந்த சுட்டதீவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் இன்னும் இயங்காத நிலையிலேயே உள்ளது.
இதற்கு காரணம் யார்...?.
இதனை விருத்தி செய்ய தடையாகவுள்ள காரணங்கள் என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆனையிறவு களப்பு பகுதியில் உள்ள நீரில் உப்பின் செறிவானது 3- 5 வீதமாக காணப்படுகின்றது. இதனை 23 வீதமாக கொண்டு வந்தால் மாத்திரமே சோடியம் குளோரைட் படியும். களப்பில் உள்ள நீர் இயந்திரம் (பம்) மூலம் 60 சதுர அடி அளவான உப்பு விளையும் பாத்திகளுக்கு இறைக்கப்படுகின்றது.
முதலாவது பாத்தியில் இறைத்த பின்னர் வெப்பம் காரணமாக அதில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்ல அதில் உப்பின் செறிவு 5 இல் இருந்து 7 வீதமாக அதிகரிக்கும்.
பரந்தன் இரசாயன தொழிற்சாலை
இவ்வாறு 7 பாத்திகளில் இறைத்து நீரை ஆவியாக செய்த பின்னர் உப்பின் செறிவு 23 வீதமாக மாறும். இதன்போது உப்பு வயலில் 23 வீத செறிவு உப்பு நீரை இறைத்து 45 நாட்கள் விட வேண்டும். அதன்பின் அதில் சோடியம் குளோரைட் (உப்பு) படியும்.
அதனை மரத்திலான பொருட்களைப் பயன்படுத்தி அள்ளி, குவியலாக்கி தென்னைக் கிடுகிகளினால் மூடி விடுவார்கள். விற்பனைக் காலம் வரை குவியலாகவே இருக்கும்.
45 நாட்களில் படிந்த உப்பினை பெறாது விட்டால் அதன் பின் அதனை உப்பாக பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. சோடியம் குளோரைட் உப்பினை பெற்ற பின் பக்க விளைவுகளான சுண்ணாம்பு, ஜிப்சம், எப்சம் போன்றவற்றையும் பெற முடியும்.
முன்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை இருந்தமையால் அவற்றைப் பெற்று அங்கு கொண்டு சென்று இரசாயன உற்பத்திக்கு பயன்படுத்தினார்கள்.
ஆனால் தற்போது அது இயங்காமையால் அவை இதில் இருந்து எடுக்கப்படுவதில்லை. அவை வீணாக அப்படியே அகற்றப்படுகின்றது.
ஆனையிறவு உப்பளத்தில் தற்போது 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்திக்கு எதிர்பார்க்கப்படுகின்ற போதும் தற்போது 1000 தொடக்கம் 12 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஆனையிறவு உப்பளத்தில் அதனை அயடீனைற் செய்து பொதி செய்வதற்கான வசதிகள் போதியதாக இல்லாமையால் புத்தளம், அம்பாந்தோட்டை, குருநாகல் போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்து இதனை கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றார்கள்.
அங்கு அவர்கள் அயடீனைற் செய்த பின்னரே பொதி செய்யப்பட்டு வடக்கு உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மன்னார், பெரியகடை பகுதியிலும் தனியார் நிறுவனத்தின் கீழ் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்ற போதும் அதுவும் முழுமை பெற்றதாக இல்லை.
இது தவிர, முல்லைத்தீவு பிரதேசத்தின் புதுமாத்தளன் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று உப்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கும், அதன் மூலம் 300 பேருக்கு தொழில் வாயப்பை வழங்கமுடியும் எனவும் திட்டத்தை தயாரித்து அதனை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கிடுகு பிடியால் அந்த முயற்சியை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது.
உப்பு உற்பத்தி
கிளிநொச்சி, தனங்களப்பு பகுதியில் உப்பு உற்பத்தியை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று முன்னர் நடைவடிக்கைகளை எடுதத போது, அப்போது இருந்த வடக்கு மாகாண சபை அதற்கான அனுமதியை வழங்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
மேலும், வடக்கில் இயற்கையாகவே உப்பு விளையும் பூநகரி, ஊரியான் போன்ற பகுதிளிலும் உப்பு உற்பத்தியை அதிகரிக்க கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் அவை இன்று வரை கண்டு கொள்ளப்படவில்லை.
இயற்கையாக விளையும் உப்பினை அவ்வூர் மக்கள் தமது தேவைக்கு தாமாகச் சென்று அள்ளி வந்து உரைப்பைகளில் தமது வீடுகளில் கட்டி வைத்து அந்த உப்பையே தமது சமையல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற நிலையும் உள்ளது.
இவை ஒருபுறமிருக்க, ஆனையிறவு உப்பளத்தில் முன்னைய காலங்களில் மூவாயிரம் பேர் வரையில் வேலை செய்த நிலையில் தற்போது வெறும் 300 பேர் வரையிலானவர்களே வேலை செய்கின்றனர்.
யுத்தத்தினால் பாதிப்படைந்த விதவைகள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களே அதிகமாக பணி புரிகின்றனர். சுற்றுலா பயணிகளும், பாடசாலை மாணவர்களும், மக்களும் வந்து பார்வையிட்டு செல்லும் சுற்றுலா தளமாகவும் தற்போது ஆனையிறவு உப்பளம் மாறி வருகின்றது.
யுத்தம் காரணமாக வடக்கில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பெண் தலைமைத்துவ குடும்பங்களாகவும், போதிய வருமானமின்றியும், வேலைவாய்ப்பின்றியும் வாழ்ந்து வருகின்றனர். ஆனையிறவு உப்பளத்தை மேலும் விருத்தி செய்து அயடீனை செய்வதன் மூலம் அதில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன், சுற்றுலா துறை தளமாகவும் மாற்றி அமைக்க முடியும்.
சுற்றுலா தளமாக மாறும் போது ஏனைய உள்ளூர் உற்பத்திகளையும் அதிகரித்து அதன் மூலம் பலருக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.
அத்துடன், உப்பினைப் பெற்ற பின் எஞ்சும் கழிவுகளை மீள பயன்படுத்த தக்க வகையில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையும் இயங்கு நிலைக்கு கொண்டு வரும் போது இதன் இரட்டிப்பு வருமானத்தை பெற முடியும்.
இது குறித்து அரசாங்கமும், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்த வேண்டும். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நிறைவடைந்து விட்ட நிலையிலும், இவ் ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்து வரும் நிலையிலும் அதனை மீள கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆனையிறவு மட்டுமன்றி வடக்கில் உப்பு உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் உப்பு உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதுடன், வடக்கில பெருமளவானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்க முடியும்.
இத்தகைய ஒரு அபிவிருத்தியை செய்வதற்கு அரசாங்கம் மட்டுமன்றி கடந்த காலங்களில் செயற்பட்ட வடக்கு மாகாண சபையும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அதனை விருத்தி செய்ய தவறிவிட்டது.
வடக்கில் அடையாளம்
முற்று முழுதாக தமிழ் மக்களுக்கான அதிகரித்த வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய இந்த வடக்கின் உப்பளங்களை விருத்தி செய்வதற்கு முனைப்பு காட்டப்படவில்லை.
தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள புதிய அரசாங்கமும், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து வடக்கின் பொக்கிசமான ஆனையிறவு உப்பளத்தை அபிவிருத்தி செய்து போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒளியூட்டி, அவர்களின் வீடுகளில் விளக்கு ஒளிர வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுடன், வடக்கில் அடையாளம் காணப்பட்ட ஏனைய உப்பு உற்பத்தி இடங்களையும், விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசாங்கமும் இதனை கருத்தில் கொண்டு புதிய வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும்.
அல்லது முறையாக மேற்கொள்ளக் கூடிய தனியார் நிறுவனங்களிடமாவது அதனை வழங்க வேண்டும்.
இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமே அடுத்த வருடத்திலாவது வெளிநாடுகளில் இருந்து உப்பினை இறக்குமதி செய்யாது சொந்த நாட்டு உப்பினை பயன்படுத்தி மக்கள் சாப்பிடக் கூடிய ஒரு நிலை உருவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 16 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.