இலங்கை அரசின் முற்போக்கான செயற்றிட்டத்தைப் பாராட்டிய ஐ.நா. - முழு ஆதரவும் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சிநேகபூர்வ உரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமாரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மரியாதையுடன் வரவேற்றதுடன், பின்னர் அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தச் செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசு தற்போது செயற்படுத்தி வரும் செயற்றிட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார, ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கினார்.
முற்போக்கான செயற்றிட்டம்
இலங்கை அரசின் புதிய முற்போக்கான செயற்றிட்டத்தைப் பாராட்டிய பொதுச்செயலாளர், அதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்நிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



