பன்னாட்டு மன்றத்தின் நாகரீகங்களுக்கான கூட்டணியின் 10ஆவது மாநாடு
KAICIID, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் சவூதி அரேபியா, ஒஸ்திரியா, மற்றும் ஸ்பெயின் ஆகியவை இணைந்து நிறுவிய, அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
இந்த நடுவத்தில் வத்திக்கான் அரசும், நிறுவனக் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடுவத்தின் முதன்மை பணிகளாக உலகளாவிய மோதல்களைத் தடுப்பதும் தீர்ப்பதும், இதற்கு புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் உரையாடலை ஒரு கருவியாக பயன்படுத்துவதும் என்பன அமைந்திருக்கின்றன.
சைவநெறிக்கூடம்
இந்த நடுவம் உலகம் முழுவதும் செயல்படுகிறது. இது மியான்மர், நைஜீரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐரோப்பா மற்றும் அரபு பிராந்தியத்தில் முன்னுரிமை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், போர்த்துக்கல் நாட்டில் நடைபெறும் 10ஆவது அனைத்துலக நாடுகளின் நாகரிங்களுக்கான சபை மற்றும் KAICIID இணைந்து நடாத்தும் மாநாட்டில் நேற்று (27.11.2024) சைவநெறிக்கூடத்தின் சார்பில் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், இலக்ஸ்மணன் லாவண்யா ஆகியோர் பங்கெடுத்தனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு, சைவ மற்றும் இந்து சமயத்தின் சார்பாளர், சைவநெறிக்கூட இணைப்பாளர் மற்றும் தமிழ் அருட்சுனையரான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமாரை, KAICIID நடுவத்தின் வாரிய உறுப்பினராக இணைத்துக்கொள்ள, நிறுவன உறுப்பினர்கள் முன்மொழிந்திருந்தனர். உறுப்பினர்கள் யாவரும் அதனை வழிமொழிந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்நடுவத்தின் இயக்குனர் சுவிட்சர்லாந்திற்கு நேரில் வந்து மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சைவநெறிக்கூடத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு மத்தியில் பன்னாட்டு பேராளர்கள் மற்றும் அரச தலைவர்கள் முன்னிலையில் நேற்று KAICIID வாரியத்தின் செயற்குழு உறுப்பினராக சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் KAICIID நடுவத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2024 நவம்பர் 25ஆம் திகதியன்று முனைவர் அல்கார்த்தி (KAICIID பொதுச் செயலாளர்) மற்றும் மிகுவேல் ஏஞ்சல் மோராட்டினோஸ் (ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் உலக நாகரீக கூட்டணியின் உயர் பிரதிநிதி) ஆகியோர் போர்த்துகலின் எஸ்டோரிலில் அமைந்துள்ள காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற 10ஆவது UNAOC உலக மன்றத்தில் சந்தித்தனர்.
இந்த மாநாடு, சமாதானத்தை ஒன்றிணைத்து நம்பிக்கையை மறுசீரமைத்து எதிர்காலத்தை வடிவமையுங்கள் ("Peace United: Restore Trust and Reshape the Future ") என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்று வருகின்றது.
கலந்துரையாடல்
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஐக்கியநாடுகள் சபையின் நாகரீகத்துறையுடன் KAICIID அமைப்பு இவ்வேளை புதுப்பித்துக்கொள்ளப்பட்டது.
சமயங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்ப்பதிலும் உலகளவில் அமைதி, சகிப்புத்தன்மை, மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதிலும் இவ்விரண்டு நிறுவனங்களின் பகிரப்பட்ட நோக்கங்களை வலியுறுத்துகின்றன.
KAICIID மற்றும் UNAOC கூட்டணியின் மூலம், பலமுக சமூக அமைப்புகளில் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஒருங்கிணைக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கூட்டாண்மை, உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தங்களது நீடித்த பங்களிப்புகளைத் தெளிவுபடுத்துகிறது, மற்றும் இரு அமைப்புகளின் உயர்ந்த நோக்கங்களை மேலும் வலியுறுத்துகிறது, சைவநெறிக்கூடமும் தனது பங்களிப்பினை இந்நோக்கங்களுக்கு அளிக்கும்.
பங்கேற்றோர்
இதேவேளை, தமிழர் தாயகத்திலும் தமிழ் மக்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும், எதிர்காலத்தை மறுசீரமைக்கும் பணிக்கு இந்நடுவம் உதவவேண்டும் என்ற கோரிக்கையினை தனது பொறுப்பேற்பின் போது சிவருசி சசிக்குமார் வேண்டுகையாக முன்வைத்தார்.
மாநாட்டின் நிறைவில், மனிதநேயத்திற்கான இரண்டு தசாப்த கால உரையாடலைப் பிரதிபலிக்கிறது“ என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது.
பல நாடுகளின் தலைவர்கள், நாடாளுமன்றத் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள், நாகரிகங்களுக்கான ஐ.நா. கூட்டணியின் தலைமை அதிகாரிகள், பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
இந்நிகழ்விற்கு ஸ்பெயின் மற்றும் ஜப்பான் நாடுகள் பங்களிப்பு அளித்திருந்தன. இந்த நிகழ்வுகள் மற்றும் தீர்மானங்கள், உலக அமைதி மற்றும் மனிதகுலத்துக்கான பெறுமதிப்புமிக்க பங்களிப்புகளை அளிப்பதாக சிவருசி சசிக்குமார் நம்பிக்கை வெளியிட்டார்.