தெளிவான போர்த் திட்டங்களை சமர்ப்பிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உறுதி
உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக சர்வதேச பங்காளிகளுக்கு தெளிவான போர் மூலோபாய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏவ்ஹேனி க்மாரா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், உக்ரைன் சர்வதேச நிதியுதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளது.
உக்ரைனின் கோரிக்கை
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க உறுதியளித்துள்ள போதிலும், அடுத்த ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள 45 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியை விரைவாக விடுவிக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுக்கவுள்ளது.

பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவையான திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் தொடர்பான தெளிவான பார்வையை பங்காளிகளுக்கு முன்வைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிய இராணுவ தலைமை தளபதி மைக்கைலோ டிராபதியுடன் இணைந்து உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் வீச்சுகளுக்கு மத்தியில், மனிதவள பற்றாக்குறை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உக்ரைனிய படைவீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சரியான தீர்மானங்களை எடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.