களுத்துறை சிறைச்சாலை பகுதியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு - வெளிவந்துள்ள தகவல்
களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே இருந்து ஒருவர் சில பொதிகளை உள்ளே வீச முயன்றதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் (21) அங்கு வானத்தை நோக்கிச் சில துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு கோபுரங்களில் பணியில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள், அந்த நபரை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அந்த நபர் பொதிகளைச் சிறைச்சாலைக்குள் வீசியதால், அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கிச் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தப்பிச் சென்ற நபர்

அந்த நபர் வீசிய பொதிகளில் இரண்டு, சிறைச்சாலை வளாகத்திற்குள் விழுந்ததாகச் சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பொதிகளில் போதைப்பொருட்களும் கஞ்சாவும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.