ஹோர்முஸை திறப்பது எளிதல்ல! 35 நாடுகளுடன் ஒன்று சேரும் பிரித்தானியாவின் அதிரடி நகர்வு
மத்திய கிழக்கு போரினால் முடக்கப்பட்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, சுமார் 35 நாடுகளின் கூட்டத்தை பிரித்தானியா இந்தவாரம் நடத்தும் என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்தார்.
சற்று முன்னர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஸ்டார்மர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யவெட் கூப்பர் (Yvette Cooper) நடத்துவார் என்று குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை நடைபெறும் திகதியை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
"கடற்பயண சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், அங்கு சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் நகர்வை மீண்டும் தொடங்கவும் தேவையான அனைத்து இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் இந்த சந்திப்பு மதிப்பீடு செய்யும்" என்று ஸ்டார்மர் கூறினார்.
தீவிரத்தன்மை
"அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, போர் நிறுத்தப்பட்ட பிறகு நீரிணையை பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கு எமது இராணுவத் திறன்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராய இராணுவத் திட்டமிடுபவர்களை நாங்கள் ஒன்று திரட்டுவோம்," என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய தகுந்த முயற்சிகளுக்குப் பங்களிக்கத் தயார் என்று அண்மையில் கையெழுத்திட்ட நாடுகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்கும்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும், "மக்களிடம் நான் உண்மையைச் சொல்ல வேண்டும். இதை (மீண்டும் திறப்பது) எளிதான காரியமாக இருக்காது," என்று ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் பிரான்ஸுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட சம்மதித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் சானே தாகாயிச்சி (Sanae Takaichi) அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு உறவுகள் மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பு குறித்து டோக்கியோவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாகாயிச்சி இதனைத் தெரிவித்தார்.
2026 - 2027ஆம் ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை
கைகோர்க்கும் சர்வதேசங்கள்
ஹோர்முஸ் நீரிணையில் கடற்பயண சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தில் தானும் உடன்படுவதாக மக்ரோன் தெரிவித்தார். ஜப்பான் தனது எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை மத்திய கிழக்கிலிருந்து பெறுகிறது.

நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைக் குறைக்க ஜப்பான் தனது எண்ணெய் கையிருப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தனது அமைதிவாத அரசியலமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, கண்ணிவெடி அகற்றும் கப்பல்களை (minesweepers) அனுப்பவும் பரிசீலிக்கலாம் என்று டோக்கியோ தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இந்த முக்கிய நீரிணையை நடைமுறையில் மூடியுள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
சாதாரண காலங்களில் உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.