ஹிஜாஸ் உள்ளிட்ட பலர் விடுதலை! - கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.
18 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்ட மாஅதிபரால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்குமாறு கோரி, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் , மேல் நீதிமன்றம் அவற்றை நிராகரித்திருந்தத.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு கிடையாது என அறிவித்து, குறித்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கு எதிராக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CA/ PHC/APN/10/22 எனும் மனுவின் உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர்.
அந்த உத்தரவுக்கு அமைவாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
We welcome the release on bail of Hejaaz, Ahnaf, and other detainees held under the PTA in recent months. The UK will continue to raise concerns of those held under the PTA - including those held in pre-trial detention for lengthy periods - and uphold their right to a fair trial.
— UK in Sri Lanka ???? (@UKinSriLanka) February 9, 2022