இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியது பிரித்தானியா
இலங்கைக்கு வரும் தனது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பயண ஆலோசனையை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அந்நிய செலாவணி நெருடிக்கடி காரணமாக, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையின் பொருளாதார நிலைமை சவாலாக உள்ளது" என்று பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தைப் பெறுவதில் சிரமங்கள்
கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் நீண்ட வரிசைகள் இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்தைப் பெறுவதில் சிரமங்கள் அல்லது தாமதங்கள் இருக்கலாம். அத்துடன் நாளாந்த மின் துண்டிப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
"மார்ச் 31, முதல் பல போராட்டங்கள் நடந்துள்ளன. அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், காயங்கள் மற்றும் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம்
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்களை பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் காலி வீதி, காலி முகத்திடல் மற்றும் கோட்டை பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாடளாவிய ரீதியில் மேலும் போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இலங்கை அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட உள்ளூர் கட்டுப்பாடுகளை குறுகிய அறிவிப்பில் விதிக்கலாம்.
எனவே, இலங்கையில் உள்ள தனது குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், எந்தவொரு ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் பிரித்தானியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.