'டொல்பின்' சூறாவளி அச்சுறுத்தல்: சீனத் தலைநகர் பீஜிங்கில் கனமழை எச்சரிக்கை
சீனாவை நோக்கி 'டொல்பின்' (Typhoon Dolphin) சூறாவளி நகர்ந்து வரும் நிலையில், தலைநகர் பீஜிங்கின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சீனக் கடலோரப் பகுதிகளை டொல்பின் சூறாவளி தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதன் முன்னெச்சரிக்கையாக பீஜிங்கின் டோங்செங், ஹைடியன் மற்றும் சியோயாங் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மணிக்கு 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மண்சரிவு அபாயங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சூறாவளி அச்சுறுத்தல் காரணமாகச் சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் படகுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மீன்பிடிப் படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளை, நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 38 பாகை செல்சியஸைத் தாண்டிய கடுமையான வெப்ப அலையும் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.