51.37 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து நாட்டினர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன் மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து நாட்டினரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் நேற்று திங்கட்கிழமை (07) வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
போத்தல்களில் மறைத்து வைப்பு..
கைது செய்யப்பட்ட 39 வயதான நபரின் பயணப் பையிலிருந்த 8 பிளாஸ்டிக் போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.224 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு ரூ. 22.24 மில்லியன்) மீட்கப்பட்டது.

அதேபோன்று, 23 வயதான மற்றொரு நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 8 பிளாஸ்டிக் போத்தல்களில் மறைக்கப்பட்டிருந்த 2.272 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு ரூ. 22.72 மில்லியன்) மற்றும் அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷிஷ் (மதிப்பு ரூ. 6.41 மில்லியன்) கைப்பற்றப்பட்டன.
அத்துடன் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 5.137 கிலோ போதைப் பொருட்களுடனும், கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening