நாட்டில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி மூவர் உயிரிழப்பு!
நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை - மனித மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே நாளில் இரு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்தந்தப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெதிரிகிரியவில் இளம் விவசாயி பலி
பொலன்னறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே 25 வயதுடைய இளம் விவசாயி காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலின் வீரியம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரிய தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பானம ஏரிக்கு அருகில் முதியவர் மரணம்
இதேவேளை, அம்பாறை - பானம பகுதியில் உள்ள ஏரிக்கு நீராடுவதற்காகச் சென்ற 71 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நீராடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது புதருக்குள் மறைந்திருந்த யானை திடீரென அவரைத் தாக்கியுள்ளது.
பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பானம தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொனராகலையில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில், மொனராகலை, எத்திமலை - கெம்பிலித்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
எத்திமலை - ஹந்தபாங்கொட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், நேற்று(23.02.2026) இரவு கெம்பிலித்த பகுதியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, அங்கு வந்த காட்டு யானை அவரைத் திடீரெனத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது எத்திமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri