மன்னார் மாவட்டத்தில் மேலும் இரண்டு கோவிட் மரணங்கள் - வைத்தியர் ரி.வினோதன்
மன்னாரில் மேலும் இரண்டு கோவிட் மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (27) மேலும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் (27) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது குறித்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாகக் கடந்த மூன்று வாரங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் இரண்டு கோவிட் மரணங்கள் இடம் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி முதல் நேற்று வரை 515 கோவிட் தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 1556 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ட்ரோன் அத்துமீறல் ஐரோப்பியர்களுக்கு போர் அபாயத்தை நினைவூட்டியிருக்கும்: ரஷ்யா வெளிப்படை News Lankasri
