தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும்
இன்றும் எட்டுக் கோடி மக்களினால் தாய்மொழியாக தமிழ் பேசப்படுகிறது. உலகின் மூத்த ஐந்து மொழிகளில் இன்றும் செழிப்புடன் உயிர் வாழுவது தமிழ்மொழி மட்டுமே. தமிழ் மொழி பேசும் மக்களின் தாய் நிலமான தமிழகத்தின் வரலாறும், தொன்மையும், அதன் பண்பாட்டுச் செழுமையும் உலக சமூகத்தில் முதன்மை பெற்றவை.
இத்தகைய செழிப்புமிக்க இந்தியாவின் தென்கோடியில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தின் சனத்திரள் அரசியலும், சட்ட ஆட்சியும் முரண்பட்டவையாக உள்ளன. இதனை தமிழகத்தின் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2005/09/27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள் என்ற செய்தி இந்தியாவில் மட்டுமல்ல உலகச் செய்தி நிறுவனங்களில் முதன்மை செய்தியாக மாறிவிட்டது.
இந்த சூழலில் இந்த மரணங்களுக்கு பின்னே உள்ள சட்ட ஒழுங்கும், சட்ட ஆட்சியும், அதன் பின்னணியும் பற்றி ஆராய்வது அவசியமானது. சட்டம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்ற, வழிப்படுத்துகின்ற, ஒவ்வொரு தனி மனிதர்களுடைய சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக மக்களினால் மக்களுக்காக ஏற்படு செய்யப்பட்ட சமூக நியம விதிகளாகும்.
இந்த சமூக ஒழுக்கவிதிகளை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளின் ஒன்றிணைந்த கூட்டு முயற்சியினால் வரையறுக்கப்படுகின்றது. இவ்வாறு வரையப்படுகின்ற விதிகளான சட்டங்கள் அந்த மக்கள் கூட்டத்தின் தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும், வழக்காறுகளில் இருந்தும், வாழ்வியல் முறைமைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுக்க ஒழுங்கு விதிகளோ சட்டங்களாக நிர்ணயம் பெறுகிறது.
அரசியல் யாப்பு
இதுவே உலகளாவிய அனைத்து நாடுகளினதும் அவரவர்களுக்கே உரித்தான சட்டங்களின் பொதுப் பண்பு இயல்பாகும். மேற்குறிப்பிடப்பட்டவாறாக நாடுகளுக்கான, அரசுகளுக்கான சட்டங்களில் இந்தியாவினுடைய இன்றைய நடைமுறை அரசுச் சட்டம் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களின் பண்பாட்டுப் பரிமாணத்தை பெறவில்லை.
எழுத்து வடிவிலான இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பண்பாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது என்று அரசியல் யாப்பு வரைபில் குறிப்பிட்டாலும்கூட உண்மையில் அது மக்களின் மனங்களிலும், நடைமுறையிலும் பண்பாட்டுப் பரிமாணத்தைப் பெறவில்லை என்றுதான் அரசியல் தத்துவார்த்த ரீதியில் கூறிட முடியும். சட்டத்தின் ஆட்சி அல்லது சட்ட ஆட்சி (Rule of Law) என்பது இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் விருத்தி அடையவில்லை.
இந்நாடுகளில் குழுக்களினதும், சாதிகளினதும் கூட்டு வாழ்வியல் அடிப்படையிலான குழுமுறை சமூகத்தின் பழக்க வழக்கங்களும், மரபுகளுமே அவர்களுடைய சமூக சட்டங்களாக அதனையே அவர்கள் சரிவர பேணுகின்ற போற்றுகின்ற முறைமையே உள்ளது. பழக்கங்களும், வழக்கங்களுமே நடைமுறைச் சட்டமாகும்.
இந்த அடிப்படையிலேயே தென்னாசிய சமூகத்தினரும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் இந்த பழக்க, வழக்கங்களுக்கு அவர்கள் பெரிதும் கட்டுப்படுவர். இங்கே பழக்கங்கள், வழக்கங்கள், மரபுகள், வழக்காறுகள் என்பவற்றை உள்ளடக்கிய பண்பாட்டு வாழ்க்கை முறையையே சட்டமாக மக்களின் கருத்து மண்டலத்தில் வியாபித்திருக்கிறது. அதுவே அவர்களுடைய உயர்ந்த சட்டமாகும்.
அதனையே மக்கள் உயர்ந்த வாழ்வியல் சட்டமாக போற்றுகின்றனர். இந்த சமூக வழக்கங்களையே புனிதமாக போற்றுதற்குரியதாக கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டியதாக கருதுகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை விட கிராமத்தின் வழக்கங்களையும், பஞ்சாயத்தின் தீர்ப்பையும் புனிதமாக மதிக்கின்றனர்.
இதனை திருமண ஒழுங்குகள், சீதன முறைமை ஊடான சொத்து பங்கீடுகள், வழிபாட்டு முறைகள், வழிபாட்டுத்தல ஒழுங்கு விதிகள், விவசாநில பயிர் செய்கை விதிமுறைகள், கால்நடை வளர்ப்பு விதிமுறைகள், பழங்குடி மலைவாழ் சமூகங்களின் வேட்டையாடல் நடைமுறைகள் மற்றும் கடல் வேட்டைச் சமூகத்தின் மீன்பிடி, கடலாடு முறைமைகள் என அனைத்திலும் பழக்க வழக்கங்களினதும் மரபுகளினதும் உயரிய பற்றுதலையும் அதன் வலுவான சமூகப் பெருமானத்தை, நடைமுறையை காணமுடியும்.
இந்திய மக்களைப் பொறுத்த அளவில் பழக்கங்களும், வழக்கங்களும் போற்றுதலுக்கு உரியதென்றும் அரசாங்கச் சட்டம் என்பது ஏமாற்றப்படக்கூடியது என்றும், எந்த வழிகளில் முடியுமோ அந்த வழிகளில் சட்டத்தை மீறலாம் எனவும் எண்ணுகின்ற மனப்பாங்கே மக்களிடம் அதிகம் உண்டு.
இந்தியர்களின் மனநிலை
இந்திய மக்களைப் பொறுத்தளவில் சட்டம் என்பது பொலிசாகவும் அதனுடைய காக்கிச்சட்டை, துப்பாக்கி, குண்டான் தடியும், நீதிமன்றமும், சிறைச்சாலையும் என்று எண்ணுகின்ற மனப்பாங்குதான் நிலைபெற்றுள்ளது.
அதற்கு ஏற்றவாறுதான் பொலிசும் அரசு அளிக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி தம்முடைய குண்டாந்தடியின் முன்னும் துப்பாக்கியின் முன்னும் மக்களை நிறுத்தி அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்தி அரசினுடைய சட்டங்களை செயல்படுத்தும்படி மக்களைக் கட்டுப்படுத்துகின்ற, ஆணையிடுகின்ற, நிர்ப்பந்திகின்ற செயற்பாடு சட்ட ஆட்சி என இந்திய மக்கள் எண்ணுகின்றனர்.
அப்படியானால் இந்தியர்கள் சட்டத்தினால் ஆளப்படவில்லை சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரத்தினால் ஆளப்படுகிறார்கள். இதனாலேயே இந்தியாவில் சட்ட ஆட்சி என்பது வலுவடையவில்லை அல்லது விருத்தியடையவில்லை.
சட்ட ஆட்சி பற்றி மக்களுக்கு சரியான புரிதலில்லை. ஜனநாயக முறை பற்றியும், அதன் விழுமியங்கள் பற்றியுமான கருத்தியலை மக்களுக்கு இந்திய ஆட்சி அதிகாரம் வழங்கவில்லை, புகட்டவில்லை, மக்களை ஜனநாயக மயப்படுத்தப்படவில்லை. அதற்கான சமூகச் சூழலும் இந்திய மக்களிடம் உருவாக்க அரசு அதற்கான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. மக்களிடம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தொன்மையான பண்பாடுகளை மீறி சட்ட ஆட்சி பற்றிய கருத்து நிலையை மக்களிடம் விதைக்க இந்திய பண்பாடு இடமளிக்கவில்லை என்பதனையும் மறப்பதற்கில்லை.
ஆயினும், அரசு என்ற நிலையில் ஒரு சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு சட்ட ஆட்சித் தத்துவம் மக்களிடம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நிலைநிறுத்தல் என்பது மனங்களை வெல்வதன் ஊடாக மனப்பாங்கு வளர்ச்சி அடைய வேண்டும். அதனுடாகவே அரசினுடைய இஸ்திரத்தன்மையை பேண முடியும்.
நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். தமிழக மக்களினாலும் சரி அல்லது ஒட்டுமொத்த இந்திய மக்களினாலும் சரி சட்டம் என்பது வெறும் இரும்புக்கோடு போலவும், வெட்டும் கத்தி போலவும் பார்க்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது என்று சொல்வதே பொருத்தமானது.
தமிழக மக்களை பொறுத்த அளவில் சட்ட ஒழுங்கு என்ற விடயத்தில் சட்டம் என்பது பொலிஸ் படையாகவே பார்க்கப்படுகிறது. ஒழுங்கு என்பது நீதிமன்றமாக பார்க்கப்படுகிறது. பொலிஸ் சொல்வதும் செய்வதுமே சட்டமாக பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்புகள் விதிகளாக பார்க்கப்படுகின்றன. சட்டத்தின்படி பொலிஸ் அல்லாமல், பொலிசின்படியே சட்டம் இதன் கீழ்த்தான் மக்களும் நடைமுறையும் என்ற நிலைமையே உண்டு. தமிழக அரசு என்ற நிலையில் இருந்து பார்க்கின்ற சட்ட ஆட்சி அல்லது சட்ட ஒழுங்கு என்பது அதன் முதல் படி நிலையிலே முற்று முழுதாக பொலிசின் பொறுப்பின் கீழே வந்து விடுகிறது.
பொலிஸ் விசாரணை
ஒரு குற்றம் பற்றியோ அல்லது சட்ட மீறல் பற்றியோ கண்டறிந்து அதனை வழக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னரே பொலிஸ் விசாரணையுடன் தீர்ப்புக்கான அனைத்து அடித்தளங்களையும் பொலிஸ் எடுத்து விடுகிறது. அது நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. குற்றத்திற்கான தண்டனை தீர்ப்பு பொலிஸ் அதிகாரத்தினாலேயே கட்டமைக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
அதுமட்டுமல்ல குற்றவாளியை கைது செய்து அடித்து உதைத்து ஆரம்ப கட்டத்தில் தண்டனையையும் அது வழங்கி விடுகிறது. அடி உதை நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பிலும் பல மடங்கு மேலானதாக வலியை கொடுக்க வல்லதாக காணப்படுகிறது. பொலிஸ் சட்டத்தை தனக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொண்டு அதன் பாதுகாப்பு நிழலில் இருந்து கொண்டுதான் இந்த அடக்கு முறையை செய்கின்றன.
இத்தகைய படிநிலைகளின் பின்னர்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு என்பதும் போலீஸ் வழங்குகின்ற நிர்ணயம் செய்யப்பட்ட தீர்ப்பினை வழங்குவதற்கான ஒழுங்குகளையும், நடைமுறைகளையும் எழுதப்பட்ட சட்டங்களின் ஊடாக பொலிசின் முடிவுகளை தவிர்க்க முடியாமல் அதன்படி செயல்பட வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலையை நீதிமன்றத்திற்கு உண்டு பண்ணி விடுகிறது.
இதனால் பொலிஸ் எதனை நினைக்கின்றதோ அதனை தீர்ப்பாக வாசிக்கின்ற இடமாகவே பெரும்பாலும் நீதிமன்றங்களை மாற்றிவிடுவதாக செயல்படுகின்றன. அதற்காக இந்திய நீதிமன்றங்கள் நீதியாக நடக்கவில்லை அல்லது அங்கு நீதி கிடைக்காது என்று அர்த்தப்படக்கூடாது. இந்திய நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்குவதற்கான, சரியான விசாரணை நடத்துவதற்கான போதுமான விசாலமான விசாரணை தளப்பொறிமுறையும், நடைமுறையும் அங்கே இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ஆகவே தமிழகத்தை பொறுத்த அளவில் சட்டம் ஆளவில்லை. பொலிஸ்தான் மக்களை ஆளுகிறது. அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய அரச ஊழியரான பொலிஸ் தேர்தல் மூலம் காலத்துக்கு காலம் மாறும் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறது. அரசியலில் வலு வேறாக்கல் தத்துவம் சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளும் ஒன்றை ஒன்று அழுத்தாமலும் ஒன்றை ஒன்று விலகாமலும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்கிறது. அதுவே ஜனநாயகத்தை சரிவர நிலை நாட்டுவதற்கான தத்துவமாகும்.
ஆனால் இந்திய அரசியலில் சட்டம் நிர்வாகத்தை நிர்ப்பந்திக்கிறது, நிர்வாகம் நீதியை நிர்பந்திக்கின்ற நிலைமையிலேயே உள்ளது. இந்த அடிப்படை நிலைமைகளில் இருந்துதான் இந்தியாவினுடைய அல்லது தமிழகத்தினது சட்ட ஒழுங்கு பற்றியும், அரசியல் செயற்பாடுகள் பற்றியும் நோக்கப்பட வேண்டும். மக்களின் கண்ணுக்கு சட்டம் என்பது பொலீசும், நீதிமன்றமும் என்ற நிலையினை மெய்ப்பிக்கும் வகையிலேயே தமிழக அரசின் ஒவ்வொரு புதிய அரசாங்கங்களும் செயற்படுகின்றன.
தாம் பொறுப்பு ஏற்றவுடன் அவர்கள் எடுக்கின்ற முதலாவது செயற்பாடு தமது கட்சிக்கு விசுவாசமான பொலீஸ் அதிகாரியை மாநில பொலீஸ் தலைமை அதிகாரியாக நியமிப்பதுதான். அதனை அடுத்து குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரியாக தமக்கு விசுவாசமான ஒருவரை நியமிப்பதும்தான். பழைய அரசாங்கத்தின் தலைமை அதிகாரிகள் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவர் அல்லது கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இங்கே அரசு அதிகாரிகள் அரசாங்கத்தால் பந்தாடப்படுகின்றனர்.
அரசாங்கம் தான் நினைத்ததை செய்வதற்கு ஏற்ற வகையில் அதிகாரிகளை மாற்றி சட்டங்களை வளைக்க வேண்டிய இடத்தில் வளைத்து மீறவேண்டிய இடத்தில் மீறி தமக்கான அரசியலை முன்னெடுப்பதுதான் பொதுவான நடைமுறையாக உள்ளது. மேற்குறிப்பிட்ட நிலைமைகள் இருந்து கொண்டுதான் கடந்த வாரம் கரூர் எனுமிடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார பொதுக்கூட்டத்தின் சட்ட ஒழுங்கு சரிவர கடைப்பிடிக்கப்படாமல் சரியான பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையினால் ஏற்பட்ட 41 பொதுமக்களின் மரணங்களையும் பார்க்க வேண்டும்.
41 பொதுமக்களின் மரணங்கள்
அதிகாரத்தில் உள்ள கட்சியின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே ஏனைய அரசியல் கட்சிகள் தமக்கான அரசியலைச் செய்ய முடியும் என்ற நிலை இந்திய அரசியலில் உண்டு. இந்த நிலையில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சியின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் 41 மக்கள் சன நெரிசல் காரணமாக உயிரிழந்தமை என்பது வேண்டுமென்றே இத்தகைய அனர்த்தம் நிகழ வேண்டும் என்பதற்கான விருப்புடன் இன்று அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர் சட்ட ஒழுங்கை வழிநடத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மக்களின் மரணங்கள் மீது அதிகாரம் செலுத்துகின்ற அரசியல் கட்சிக்கு மக்கள்மீது எந்தவித கரிசனையும் இல்லை. மக்களின் மரணங்களை பயன்படுத்தி மக்களின் பிணங்களில் மீது ஏறி நின்று தமது ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க ஆளும் அரசியல் கட்சிகள் செயற்படுவது என்பது துயரகரமானது அரசியல் மட்டுமல்ல ஜனநாயக விரோதமானதும், மக்கள் விரோதமானதும் என்றே குறிப்பிடுவது பொருந்து.
இந்த அனர்த்தத்திற்கு நடைமுறையில் இருக்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பு. அரச அதிகாரிகளின் பொறுப்பு. மாநில காவல்துறையின் பொறுப்பு. பொறுப்புக்கள் சரிவர ஆற்றப்படவில்லை, தொழிற்படவில்லை என்பதனாலேயே மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மரணங்களுக்கு பின்னே கூட்டத்தின் கலகங்களை விளைவித்து சன நெரிசல்களை ஏற்படுத்தியமை, மின்சார தடைகளை ஏற்படுத்தியமை, அரசாங்கத்தின் சார்புடையவர்கள் இந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து சதி நடவடிக்கைகள் ஈடுபட்டமை, விஜயின் பேச்சைப் பார்க்க பெருமலான மக்கள் கூடும் கூட்டத்திற்கு குறுகலான குறுகிய மக்கள் தொகை கொள்ளக் கூடிய ஒரு நெருக்கடியான இடத்தை கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியமை, இந்த அனுமதிக்கு பின்னே ஆளுங்கட்சியின் பிரமுகர் இருந்தமை என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆயினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அல்லது இந்த குற்றங்கள் நிகழ்வதற்கும் பெருமளவு மக்கள் மரணமடைந்தமைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்? அது தமிழக அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்கமே முற்று முழுதான பொறுப்பை ஏற்பதுதான் ஜனநாயக முறை. இத்தகைய உயர்ந்த ஜனநாயக முறைகளை தலைவர்கள் பின்பற்றினால்தான் மக்களும் ஜனநாயக முறைகளை பின்பற்றுவர். அரசினுடைய சட்டங்களை பின்பற்றுவர், அரசாங்கத்தினுடைய சட்ட ஒழுங்கை மதித்து ஒழுகுவர்.
இல்லையேல் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து ஒரு சீரழிவு அரசியலே வளர்ந்து வரும் இந்தியாவில் வளர்ந்து வருவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும்.
வளர்ந்து வரும் இந்தியாவின் சட்ட ஒழுங்கும், மக்கள் நடவடிக்கையும், மக்களின் பொது மனப்பாங்கு பற்றிய ஆய்வுகளும், படிப்பினைகளும் அவசியமானது. இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்திலும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கான உபாயங்கள் பற்றி சிந்திக்கவும், செயல்படவும் அதற்கேற்ற வகையிலான மக்களின் கருத்து மண்டலத்தின் கருத்தியல் மாற்றமும் அவசியமானது. கரூரில் ஏற்பட்ட மரணங்கள் இதனைத்தான் இந்திய சட்ட ஆட்சியின் மீது கண்டனமாக முன்வைப்பதோடு மாற்றத்தையும் வேண்டி நிற்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 05 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
