கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் கைது! (Photos)
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு அம்பாறை கண்டி வீதியிலுள்ள அம்பாறை நகர் பகுதியை அண்டிய புத்தங்கல பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அம்பாறையை நோக்கி பிரயாணித்த காரை விசேட அதிரடிப்படையின் நிறுத்தி மடக்கிபிடித்துள்ளனர்.
இதில் 3 கஜமுத்துக்களை கடத்திவந்த இருவரை கைது செய்ததுடன் கஜமுத்து மற்றும் கார் ஒன்றை மீட்டு அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




