குருதி தோய்ந்த செம்மணியும் தமிழ்த்தேசிய இனத்தின் ஏக்கமும்..!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. தென்னிலங்கையில் ஊழல் மோசடி வழக்குகள், போதைப் பொருள் மாபியாக்களின் கைதுகள் என்பன பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் செம்மணி சித்துபாத்தி மனித புகைதகுழி தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தியுள்ளது. வடக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களும், செம்மணிக்கான நீதி கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.
ஐ.நாவில் அநுரகுமார
இந்த நிலையில் ஐ.நாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் உரையும் இடம்பெறவுள்ளது. அவரது உரையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பு குறித்து ஐ.நாவில் என்ன கூறப்போகின்றார் என்ற கேள்வி தமிழ் தேசிய இனத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி விவகாரமும் சூடு பிடித்துள்ளது.
யுத்தகாலத்தில் யாழ்.குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது கைது செய்யப்பட்ட மற்றும் கட்டத்தப்பட்டு காணாமல் போனவர்களே கொல்லப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், தமிழ் அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.
மாணவி கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை கைதியாகவுள்ள இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச, செம்மணியில் 300- 400 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்து இருந்ததுடன், செம்மணி புதைகுழி குறித்து சாட்சியமளிக்க தான் தயார் என அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார்.
உரிய தண்டனை
அவரது கருத்துக்கள் அங்கு இடம்பெற்ற கொலைகளுக்கான சாட்சியங்களாகவுள்ளன. அவரது சாட்சியங்களின் அடிப்படையில் அதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் என பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும். இலங்கை அரச படைகளின் வன்மத்தையும், அவர்களது கொடூர வெறியாட்டத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும்.
ஆனால், தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குவாத பௌத்த மேலாதிக்கத்தை எதிர்த்து இந்த அரசாங்கம் செம்மணி விவகாரத்தை நீதியாகவும், நேர்மையாகவும் விசாரித்து படைத் தரப்புக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்குமா..? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதற்கு முள்ளிவாய்க்கால் மண் மட்டுமன்றி செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியும் சாட்சியாக கண் முன்னே வந்து நிற்கின்றது. அங்கு மீட்கப்பட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான 239 எலும்புக் கூடுகளும், அவற்றை ஆடைகளற்று புதைக்கப்பட்டிருந்த நிலைகளும், 72 சான்றுப் பொருட்களும் அங்கு நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தும் சான்றுகளாகவுள்ளன. இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் செம்மணி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றம் தனது கடமையை செய்யும் எனவும் அதில் அரசாங்கம் தலையீடாது. தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும் எனவும் கூறியுள்ளது. இரண்டு கட்ட அகழ்வு பணிகள் இடம்பெற்று மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் இனி இடம்பெற வேண்டும்.
செம்மணி
அதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும். அதனைச் செய்து நீதியான முறையில் செம்மணி விசாரணை இடம்பெற அரசாங்கம் வழிவிடுமா? கடந்த காலங்களைப் போல் அல்லாது பொலிஸ் மற்றும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக கூறிக் கொள்ளும் அரசாங்கம் செம்மணி விடய்திலும் நீதியாக நடந்து கொள்ள வேண்டும்.
மனித புதைகுழிகள் உட்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகவே இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் இந்த தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை தயாராகவே உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தானது ஐ.நாவை சமாளிப்பதற்கான கண் துடைப்பாக இல்லாமல, உண்மையான கருத்தாக இருக்க வேண்டும். சர்வதே சமூகமும் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும். செம்மணி என்பது குருதி தோய்ந்த மண். அங்கு மரணித்தவர்களை மீள கொண்டு வர முடியாது.
ஆனாலும் அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கபடுவதன் மூலமே மீள நிகழாமையை உறுதிப்படுத்தி, குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பரிகார நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். அது அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமையும். இந்த நாட்டின் நீதித் துறையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி தமிழ் தேசிய இனமும் இலங்கையர்களாக ஒரு மித்து பயணிக்க வழிவகுக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 24 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




