50 இலட்சம் ரூபா பெறுமதியான சுருக்கு வலைகளுடன் இருவர் கைது
காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை நேற்று(05.11.2026) அதிகாலையில் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
பாலமுனை கடற்கரைக்கு செல்லும் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை கடற்கரையை நோக்கி பிரயாணித்த மூடிய சிறிய ரக வாகனம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன்போது அதில் சட்டவிரோத சுருக்கு வலைகளை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவரை கைது செய்ததுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளையும் மூடிய சிறிய ரக வாகனத்தையும் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திணைக்கள அதிகாரிகள் இந்த சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பாக எது விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்கில் செயற்படுவதாக கடற்றொழிலாளர்கள் கடும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.