நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்(Video)
தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26.12.2023) அனுஸ்டிக்கப்படுகின்றது.
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று (26.12.2023) நாடளாவிய ரீதியில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுனாமி குறித்து எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலி
மதச்சார்பற்ற விழாக்களுக்கு முன்னுரிமை அளித்து தேசிய பாதுகாப்பு தினத்தை அனுஸ்டிக்குமாறு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் பெருலிய சுனாமி நினைவிடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டிசம்பர் 26, 2004 அன்று நிகழ்ந்த சுனாமி அனர்த்தம் காரணமாக, இலங்கையில் 31,225 இற்கும் அதிகமான உயிர்கள் உட்பட உலகெங்கிலும் 2,25,000 க்கும் அதிகமானோர் சில நொடிகளில் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 19வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில்நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், புதுமுகத்துவாரம்,நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.
திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உறவுகளின் கண்ணீருடன் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக கிறிஸ்தவ முறைப்படி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகள் அஞ்சலி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாநகரசபையின் பிரதி முதல்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்ததினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டது.
செய்தி - குமார்
இதேவேளை மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் சுனாமி தாக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து ஆலய பரிபாலன சபையின் தலைவர். சி.மங்களராஜன் தலைமையில் விசேட நினைவஞ்சலி பூஜை இடம்பெற்றது.
செய்தி - ருசாத்
வவுனியா
மேலும், வவுனியா, குட்செட்வீதி, கருமாரியம்மன் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று (26.12.2023) காலை அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது, சுனாமியில் உயிர் நீத்த உறவுகளிற்காக மோட்ச தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அந்தணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி - திலீபன்
வவுனியா, பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 19 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மன்னார்
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,சர்வமத தலைவர்கள்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
செய்தி - ஆஸிக்
அம்பாறை
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை ,சாய்ந்தமருது ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
யாழ்ப்பாணம்
மேலும், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.
உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
செய்தி - தீபன்
இந்நிலையில், யாழ் மாவட்ட செயல அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜா தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆளிப்பேரலையால் மரணித்தவர்களுக்காக சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும்,இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி - கஜி
கிளிநொச்சி
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.தேசியக்கொடியினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
செய்தி - சுழியன்
திருகோணமலை
சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று (26) கூரப்பட்டது.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு நிகழ்ச்சிகள் தொடங்கியதுடன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் சண்முகம் குகதாசன் பிரதான சுடரினை ஏற்றி வைத்தார்.
செய்தி - பதுர்தின் சியானா
மத்திய மாகாணம்
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2023 அன்றுடன் 19 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு
ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
செய்தி - ஷான்
கட்டைக்காட்டில் நினைவேந்தல் நிகழ்வு
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் 19 ஆவது சுனாமி நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கட்டைக்காடு கடற்றொழிளாளர் கூட்டுறவு சங்க தலைவர் செ.செபஸ்ரியன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் அருட்தந்தை அமல்ராஜ்,மற்றும் முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈகைக்சுடரினை உயிரிழந்த உறவுகளின் உறவினர் ஒருவர் ஏற்றிவைக்க நினைவுத் தூபிக்கான மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தங்களது உறவுகளை இழந்த நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |