வொஷிங்டனில் அமைக்கப்படவுள்ள வெற்றி வளைவை இராணுவ வளாகமாக மாற்ற ட்ரம்ப் திட்டம்
வொஷிங்டனில் உள்ள ஆர்லிங்டன் தேசிய மயானத்திற்கு அருகே அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘வெற்றி வளைவை’ (Triumphal Arch) ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் மற்றும் பெருமளவிலான வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கும் ஒரு இராணுவ வளாகமாக மாற்றவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு நேற்று(20.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற வீரர்களுக்கு எதிராக வழக்கு பதிவு
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த 250 அடி (76 மீற்றர்) உயர வெற்றி வளைவை, இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராணுவ வளாகமாக மாற்ற ஒப்புக்கொண்டதாகத் தனது சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த வெற்றி வளைவின் கூரை மற்றும் தரைப்பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஸ்னைப்பர்களை நிறுத்துவதற்கும், பெருமளவிலான வெடிமருந்துகளைச் சேமித்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இருப்பினும், இந்த வெற்றி வளைவு அமைவிடம் மேஜர் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் விமானப் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, லிங்கன் நினைவகத்திற்கும் ஆர்லிங்டன் தேசிய மயானத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பார்வையை இது அழித்துவிடும் எனக் கூறி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.