75 நாடுகளுக்கான விசா தடை குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கை : இரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் குடியேற்ற விசாக்களை வழங்குவதை இடைநிறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த கொள்கையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறி இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாக மான்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜெனெட் வர்காஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது
தேசிய இனத்தின் அடிப்படையில் விசா வழங்குவதை ஒட்டுமொத்தமாகத் தடுப்பது கூட்டாட்சி குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்த இந்த விசா இடைநிறுத்த உத்தரவால் பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா உட்பட இலத்தீன் அமெரிக்கா, பால்கன் பகுதிகள், தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொது நிதி ஆதாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்ட போதிலும், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.