ட்ரம்ப்பிற்கே போர்நிறுத்தம் தேவை: ஈரான் பேராசிரியர் கருத்து
ஈரானியத் தலைமைத்துவத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி வருவது, உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையிலானது எனத் தெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபோவாட் இசாடி தெரிவித்துள்ளார்.
ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் இராணுவத் தளபதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அவர், அமெரிக்க ஜனாதிபதிதான் தற்போது இக்கட்டான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் 'போர் அதிகாரச் சட்டம்' வழங்கியுள்ள 60 நாட்கள் அவகாசம் அடுத்த வாரத்துடன் முடிவடைவதே இதற்குக் காரணம் என அவர் விளக்கியுள்ளார்.
எண்ணெய் நெருக்கடி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தப் போருக்கு ஆதரவாக ஏற்கனவே ஒரு வாக்கு வித்தியாசத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவுபடுத்திய பேராசிரியர் இசாடி, அடுத்த வாரம் மீண்டும் ஒரு நேரடி மோதல் ஏற்பட்டால் நாடாளுமன்றம் அதற்கு எதிராக வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எண்ணெய் நெருக்கடியை நிர்வகிக்க முடியாமல் ட்ரம்ப் கடும் பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், எனவே தற்போதைய சூழலில் போர்நிறுத்தம் என்பது ஈரானை விட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கே அதிகத் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.