காசாவில் பிறவி ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகரிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் வைத்தியசாலையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில், போர்ச் சூழலால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிறவி ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழ்வதற்காகப் போராடி வருகின்றனர்.
இரண்டு வாரமே ஆன குழந்தை அகமதுவின் மூளையில் நீர் கோர்த்துள்ள நிலையில், இதயம் மற்றும் காதுகளில் சிதைவுகளுடன் பிறந்த சுஹேர் மற்றும் உசாமா போன்ற குழந்தைகளும் அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தனது முதல் குழந்தையான உசாமாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மரபணு ரீதியானது அல்ல என்றும், போர்க்காலத்தின் போது நிலவிய பட்டினி மற்றும் அசுத்தமான குடிநீர் போன்றவையே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் விளக்கியதாக அவரது தாய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடுமையான பாதிப்பு
இந்தக் கடுமையான பாதிப்புக்கு மக்களிடையே நிலவும் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதார சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளமை, அதிகப்படியான மக்கள் நெரிசல், மாசுபட்ட குடிநீர் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களின் தாக்கம் என இந்த ஐந்து முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 457 பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.இது போருக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவீத அதிகரிப்பாகும்.
போரினால் ஏற்படும் பாதிப்புகள் தற்போதைய தலைமுறையினரைத் தாண்டி, பிறக்கின்ற அடுத்த சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் சிதைத்து வருவதை இந்தத் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.