குச்சவெளி இளைஞர் துன்புறுத்தப்பட்டு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக முறைப்பாடு
குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான் என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16.07.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையைச் சேர்ந்த இருவர் தங்களை வழிமறித்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சுமார் 200 முதல் 300 மீற்றர் தூரம் கடற்கரையை நோக்கி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்
இந்தச் சம்பவம் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தனது தாயாரையும் சகோதரியையும் கடற்படையினர் தாக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன் பின்னர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், கரையில் நிறுத்தப்பட்டிருந்த OFRP-A-5694 CHW பதிவு இலக்கம் கொண்ட படகில் தன்னை வலுக்கட்டாயமாக ஏற்றியதாகவும், தனது காலில் சுமார் 40 கிலோ எடையுள்ள பாராங்கல்லைக் கட்டி, "சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் கடலில் தூக்கி வீசிவிடுவோம்" என உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் படகு மூலம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு வந்த தனது பெற்றோரை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய பின்னர், தன்னையும் குறித்த படகையும் குச்சவெளி வடக்கு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்து பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.