செக் குடியரசில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: படைவீரர் ஒருவர் பலி - 4 பேர் காயம்
செக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 படைவீரர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைநகர் பிராக்கில் இருந்து தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள நமேஸ்ட் நாத் ஒஸ்லாவோ என்ற இராணுவ தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பெல் டெக்ஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட UH-1Y வெனம் ரக ஹெலிகாப்டர் இந்த விபத்தில் சிக்கியது. விபத்தில் காயம் அடைந்த மூன்று வீரர்கள் நடுத்தர அளவிலான காயங்களுடன் பர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
ட்ரெபிக் மருத்துவமனை
ஒரு வீரர் இலேசான காயங்களுடன் ஜிஹ்லாவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்தின் போது ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ட்ரெபிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"காயமடைந்த வீரர்களுக்கும், உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும், பராமரிப்பையும் வழங்குவதே எங்களின் தற்போதைய முதன்மை முன்னுரிமையாகும்."
இந்த விபத்து குறித்து விசாரணை முடிவடையும் வரை, இராணுவத்தில் உள்ள அனைத்து H-1 ரக ஹெலிகொப்டர்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக செக் இராணுவம் அறிவித்துள்ளது.