ஒபாமா காலத்து முக்கிய விதியை ரத்து செய்தார் ட்ரம்ப்: சுற்றுச்சூழல் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
புவி வெப்பமடைவதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையாக விளங்கிய 2009ஆம் ஆண்டின் "ஆபத்து கண்டறிதல்" என்ற முக்கிய அறிவியல் விதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
அத்துடன், இந்த ஒபாமா ஆட்சியில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் அதிரடி முடிவு
இதன்படி, மேற்குறிப்பிடப்படும் விதியானது, காபனீரொக்சைட்டு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கியது.

இந்த இரத்தை, “அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய விதிவிலக்கு" (deregulation) என்று வர்ணித்துள்ள வெள்ளை மாளிகை, இதன் மூலம் வாகனத் தயாரிப்புச் செலவு ஒரு வாகனத்திற்கு 2,400 டொலர் வரை குறையும் என்றும், நுகர்வோருக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்குச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த விதியை இரத்து செய்வது அமெரிக்கர்களை அதிக ஆபத்திற்கும், ஆரோக்கியமற்ற சூழலுக்கும் தள்ளும் என்றும் இது எரிபொருள் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காகச் செய்யப்பட்ட முடிவு என்றும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த முடிவால் சுமார் 58,000 அகால மரணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், குறித்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்குச் செல்ல உள்ள நிலையில், அமெரிக்காவின் காலநிலை மாற்றக் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்தத் தலைகீழ் மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாங்களை கிளப்பியுள்ளது.