திடீரென விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்! இலங்கை விமானப்படை எடுத்துள்ள நடவடிக்கை
திருகோணமலை சீனக்குடாவில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தினையடுத்து, PT-06 ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.
சீனக்குடா விமானப்படை பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்து தொடர்பில், விமானப்படைத்தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், விமானங்கள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை சீனக்குடா விமானப்படை கல்லூரியின் இரண்டு விமானப்படை வீரர்கள் உயிரிழந்த PT 6 ரக விமானம் 2018 ஆம் ஆண்டு விமானப்படையினால் கொள்வனவு செய்யப்பட்ட விமானம் என்றும், அது 4000 விமான நேரங்களை மட்டுமே நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை விமானப்படை வெளியிட்ட தகவல்
இலங்கை விமானப்படையினால் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட அனைத்து PT 6 ரக விமானங்களும் 2000-2018 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் 1985 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு சீன இராணுவத்தின் விமானப்படைக்கு வழங்கப்பட்டதாகவும், 1979 ஆம் ஆண்டில் PT6 என்ற பெயரில் சுமார் 3000 விமானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
உலகின் பல விமான நிறுவனங்கள் இந்த PT6 விமானத்தை பைலட் பயிற்சிக்காக பயன்படுத்துவதாகவும் , இந்த விமானம் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகவும், அதன் நிலை சரிபார்க்கப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானி லெப்டினன்ட் தரிது ஹேரத் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக் ஜெட் விமான விபத்தில் உயிர் தப்பியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் இலக்கம் 12 ஜெட் படைக்கு சொந்தமான MIG 27 ரக போர் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள தும்மலசூரியவில் விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த லெப்டினன்ட் தரிது ஹேரத் பாதுகாப்பாக ஜெட் விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பியிருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.