திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட குச்சவெளி பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பிலும் பொது போக்குவரத்து வசதிகள் விரிவாக்கம் தொடர்பிலும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நேற்று(31.01.2026) மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போதே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அத்துடன், திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்தகுமாரவின் ஏற்பாட்டிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்க நெறிப்படுத்தியிருந்தார்.
அதில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆராயப்பட்ட விடயங்கள்
இதன்போது, வீதி அபிவிருத்தி ,கிராமிய வீதிகள்,பாலங்கல் தொடர்பிலான முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கடந்த ஆண்டிற்கான முன்னேற்ற மதிப்பீட்டு மீளாய்வு நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

மேலும், குளங்கள் அபிவிருத்தி, புகையிரத சேவை விரிவாக்கம் மற்றும் கழிவு முகாமைத்துவம், வனஜீவராசிகள் ஊடாக யானை வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அனர்த்த காலங்களின் பாதிக்கப்பட்ட கரையோர மற்றும் வீதி புனரமைப்பு தொடர்பிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நகர அபிவிருத்தி தொடர்பிலும் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


