திருகோணமலையில் போலி நாணயத்தாள் பாவனை அதிகரிப்பு: 5 பேர் கைது
திருகோணமலை - குச்சவெளி பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று குச்சவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
போலி நாணயத்தாள் பாவனை
குச்சவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பெட்ரோல்
நிரப்பும் போதே புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள், முல்லைதீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 21, 23 மற்றும் 40 வயதுடைய மூவரும், குச்சவெளி - சலப்பையாறு பகுதியைச் சேர்ந்த 23, 27 வயதுடைய இருவரும் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபர்களை விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் பின் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



