விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய 38 துப்பாக்கிதாரிகள்..!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மேற்படி 38 துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
துப்பாக்கிதாரிகள்
இன்று(20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 27 மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 263 பேரும், சந்தேகத்தின் பேரில் 328 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட நடவடிக்கையின்போது ரி - 56 ரக துப்பாக்கிகள் 61 , பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 62, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 40 மற்றும் ஏனைய ரக துப்பாக்கிகள் 1,721 கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.



