முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை
மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வெளிநாட்டுப் பயணத்தடை
முன்னதாக, இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருந்தது.
தற்போது, அந்த விடுதலைத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.