மதுபானசாலை உரிமத்திற்கு 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் பரிமாற்றம்: தயாசிறி குற்றச்சாட்டு
இலங்கை முழுவதிலும் உள்ள 1,028 மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மதுபானசாலைகளுக்கு புதிய அனுமதி
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“2024 மே 10 ஆம் திகதிக்குள் சுமார் 1,028 மதுபானசாலைகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் 10 மில்லியன் பெறப்படுகிறது.அனுமதி வழங்கப்பட்ட பிறகு 20 மில்லியன் ருபாய் பெறப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் 137 அனுமதிப்பத்திரங்களும், கம்பஹா மாவட்டத்தில் 128 அனுமதிப்பத்திரங்களும், ஹோட்டல்களுக்கு 1,089 அனுமதிப்பத்திரங்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 306 அனுமதிப்பத்திரங்களும், உணவகங்களுக்கு 765 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு மதுபான உரிமம் கோரி ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது வரை நாடாளுமன்ற உறுப்பினர்களால், மதுபான உரிமம் தொடர்பில் 300 மில்லியன் ரூபாய் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுகமாக நிதி திரட்டுவதற்கான நிதி அமைச்சின் நடவடிக்கையே இது.” என ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |