அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் லண்டனில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா
லண்டனில் கடந்த சில வாரங்களாக யூதர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், ஆயிரக்கணக்கான பிரித்தானிய யூதர்கள் வடக்கு லண்டனில் ஒன்றுகூடி தங்களது பாரம்பரிய 'லாக் பி ஓமர்' திருவிழாவைக் கொண்டாடினர்.
கடந்த ஏப்ரல் 29 அன்று இரண்டு யூத ஆண்கள் வீதியில் வைத்து குத்தப்பட்ட சம்பவமும், மார்ச் மாதம் முதல் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்களும் சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், நூற்றுக்கணக்கான ஆண்கள் பாரம்பரிய உடையில் ஒன்றுகூடித் தீயைச் சுற்றி நடனமாடியும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..
இவர்களுடன் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டனர். சமீபத்திய வன்முறைச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, விழா நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

யூதர்களின் பாரம்பரிய கருப்பு நிற உடைகளுக்கு மத்தியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் மஞ்சள் நிற உடைகள் தனித்துத் தெரிந்தன.
இந்த ஆண்டு திருவிழா மற்ற ஆண்டுகளை விட சற்று மாறுபட்டதாக அமைந்திருந்தது. இது ஒரு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், சவாலான காலக்கட்டங்களில் சமூகத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு தருணமாகவும் பார்க்கப்பட்டது.
பிரித்தானிய யூதர்களின் பாதுகாப்பு தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், லண்டன் காவல்துறை யூதர்களைப் பாதுகாப்பதற்காகத் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அச்சம் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியிலும் தங்களது மதச் சடங்குகளைத் தடையின்றி மேற்கொண்ட இந்த நிகழ்வு, அந்தச் சமூகத்தின் மன உறுதியைப் பறைசாற்றுவதாக அமைந்தது.