அமெரிக்க ஜனாதிபதியின் கனவுத் திட்டத்திற்கு நீதிமன்றம் அதிரடித் தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டமான 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பால்ரூம் (Ballroom) கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சர்ச்சைக்கரிய திட்டத்திற்கு நீதிமன்றம் அளித்துள்ள மிகப்பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.
கொலம்பியா மாகாணத்திற்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வளவு பெரிய பால்ரூம் கட்டப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.
இது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரம் சார்ந்த விடயம் அல்ல என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஜனாதிபதியும் வெள்ளை மாளிகையின் தற்காலிக குடியாளிதானே தவிர, அதன் உரிமையாளர் அல்ல. தற்போதைய மற்றும் எதிர்கால அதிபர்களுக்காகவும், அமெரிக்க மக்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை, தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க அதிபருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, பால்ரூம் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்குப் பகுதியை டிரம்ப் நிர்வாகம் இடித்தது.
இதை எதிர்த்து 'வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை' நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
கீழ் நீதிமன்றம் தரைக்கு மேல் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், அதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது அந்தத் தடையை மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமானப் பணியையும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.