ஈஸ்டர் வழக்கு தீர்ப்பு நியாயமற்றது என தண்டிக்கப்பட்ட சிலர் கூச்சலிட்டு எதிர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தி நேற்றைய தினம் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களில் சிலர் தீர்ப்பு தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நள்ளிரவு வேளையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்லான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் பிரகாரம் தண்டிக்கப்பட்ட 15 பிரதிவாதிகள் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

சிலர் இந்த நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது என கருத்து வெளியிட்டிருந்தனர். நீதிபதிகளின் பதவி உயர்வுக்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என ஒருவர் குற்றம் சுமத்தி இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் இந்த தீர்ப்பு அமையப் பெறவில்லை என மற்றுமொருவர் தெரிவித்தார்.
மிகவும் அவசர அவசரமாக இரண்டு வாரங்களில் இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது என மற்றுமொரு பிரதிவாதி ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு அநீதியான தீர்ப்பு என பிரதிவாதி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வழக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு பதவி உயர்வு வழங்கவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும் இது குறித்து பிரச்சினையில்லை எனவும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் பிரதிவாதியொருவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என கைதி ஒருவர் ஆங்கிலத்தில் உரக்க கூச்சலிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தீர்ப்பு அநீதியானது என மற்றும் ஒரு கைதி தெரிவித்தார்.
நீதிமன்றில் தாங்கள் முன்வைத்த சமர்ப்பிப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை என மற்றுமொரு பிரதிவாதி கவலை வெளியிட்டார்.
பொதுவாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான இந்த தீர்ப்பு தொடர்பில் பிரதிவாதிகளில் சிலர் தங்களது கடும் விசனத்தையும் எதிர்ப்பையும் அதிருத்தியையும் வெளியிட்டனர்.
பேருந்தில் ஏறி சிறைச்சாலை நோக்கி செல்லும்போது ஊடகவியலாளர்களிடம் இந்த பிரதிவாதிகள் தங்களது கருத்துக்களை கூச்சலிட்டு வெளியிட்டதனை அவதானிக்க முடிந்தது.